கும்கி யானையாக மாற்றப்படுகிறதா சின்னத்தம்பி?
சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தற்போது இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய சின்னதம்பி என்ற காட்டுயானை பெரும்போராட்டத்துக்கு வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்..
ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி இரண்டு நாட்களில் மீண்டும் ஊருக்குள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் ஊருக்குள் சுற்றித்திரியும் சின்னதம்பியை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா முறையீடு செய்துள்ளார். அந்த முறையீட்டில் முறையீட்டை யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மதியமே விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தற்போது அரசுக்கோ, வனத்துறைக்கோ இல்லை எனவும் சின்னதம்பியை மீண்டும் காட்டுக்குள் அனுப்பவே இரண்டு கும்கி யானைகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீவத்சவா ஆகியோர் தனித்தனியே தகவல் தெரிவித்தனர்.