கும்பமேளா நிகழ்ச்சியால் ரூ.1 லட்சம் கோடி வருமானமா?
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15ம் தேதி தொடங்கிய கும்பமேளா நிகழ்ச்சியில் நீராட உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். தினமும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த நிழ்ச்சியை நடத்த உத்தரப்பிரதேச அரசு ரூ.4200 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், அதேபோல் இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியபோது, கும்பமேளா நிகழ்ச்சி மூலம் சுமார் 6 லட்சத்தும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெறுவர். உணவகத்துறையில் சுமார் 2.5 லட்சம் பேருக்கும் சுற்றுலா நிறுவனங்களில் சுமார் 45 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
அதே போல் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் விமான போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் விமான நிறுவனம் தொடர்பான சுமார் 1.5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி வாடகை கார் ஓட்டுநர்கள், வழிகாட்டிகள், மொழி பெயர்ப்பாளர்கள் என்ற அமைப்பு சாராத சுமார் 55ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
கும்பமேளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள மாநிலங்களுக்கும் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளதால் கும்பமேளா மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களுக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது