கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்!
கல்விக் கூடங்களுக்கும், கலைக் கூடங்களுக்கும் தலைமைக் கேந்திரமாகத் திகழ்ந்த காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் பல்லவர்கள். அவர்கள் காலத்தில் கல்வியும், கலைகளும் மட்டுமில்லாமல், ஆன்மிகமும் தழைத்துச் செழித்தது. பல்லவ மன்னர்களில் மூன்றாம் நந்திவர்மன் மிகச் சிறந்த சிவபக்தராகவும், கல்வி மற்றும் கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவராகவும் திகழ்ந்தார்.
தமிழுக்காகத் தன் உயிரையே சமர்ப்பணம் செய்த பெருமைக்குரிய மூன்றாம் நந்திவர்மன், தன்னுடைய சிவபக்தியின் காரணமாக எண்ணற்ற சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்திருப்பதுடன், புதிய சிவாலயங்களையும் நிர்மாணித்திருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஓர் ஆலயம்தான், அரக்கோணத்துக்கு மேற்கே அமைந்திருக்கும் வேலூர்பாளையம் அருள்மிகு பிரம்மாம்பிகை சமேத அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோயில்.
இந்த ஆலயம் சிதிலம் அடைந்திருப்பதாக வாசகர் ஒருவர் தகவல் கூறியதைத் தொடர்ந்து, நாம் வேலூர் பாளையத்துக்குச் சென்றோம். கோயிலின் திருப்பணிகள் தொடங்கி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் கரைந்துபோனது. காரணம், போதிய நிதி உதவி கிடைக்காத காரணத்தால், திருப்பணிகள் தொய்வு அடைந்திருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்ததுதான்.
அங்கே சென்ற பிறகுதான், வேலூர்பாளையம் ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், வரலாற்று ரீதியாகவும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஊர் என்பது நமக்குத் தெரியவந்தது. மூன்றாம் நந்திவர்மன் ஆட்சிக் காலம் போர்கள் நிறைந்த காலமாக இருந்தது. புள்ளளூர், தெள்ளாறு போன்ற இடங்களில் போர்கள் நடைபெற்றதும், அந்தப் போர்களில் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் வெற்றி பெற்றதும் செப்பேட்டு சாசனங்களில் இருந்தும், கல்வெட்டுகளில் இருந்தும் தெரிய வருகிறது.
இரண்டாம் நந்திவர்மன், தந்திவர்மன் ஆகியோர் காலத்தில் அமைச்சராக இருந்த பிரம்மஸ்ரீ ராஜன் என்பவர் மூன்றாம் நந்திவர்மன் காலத்திலும் அமைச்சராக இருந்தார். அவர்தான், வேலூர்பாளையம் பிரம்மதேவர் தவம் இயற்றி சிவபெருமானின் அருள்பெற்ற தலம் என்றும், அங்கே சிவபெருமானுக்கு ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டால், அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்றும் மூன்றாம் நந்திவர்மனிடம் கூறினார். இயல்பிலேயே சிவபக்தி மிக்கவர் என்பதால், அமைச்சர் கூறியபடியே அங்கே சிவபெருமானுக்கு ஓர் ஆலயம் அமைத்து, ஆலயத் தில் நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறுவதற்காக மானியங்களையும் அளித்தார் மூன்றாம் நந்திவர்மன்.
போர்களினால் வறட்சி நிலவிய சூழலில், மானியமாக வழங்கிய நிலங்களில் எப்படி விளைச்சல் உண்டாகும் என்பதை உணர்ந்து, பாசனத்துக்கான நீர் ஆதாரத்தைப் பெருக்க வேலூர்பாளையத்தில் ஓர் ஏரியும் ஏற்படுத்தினார். வேலூர்பாளையம் மட்டுமல்லாமல், உத்திரமேரூர், வந்தவாசி, மாமண்டூர், காவேரிப்பாக்கம் என்று பல்லவர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பிரமாண்டமான ஏரிகளை அமைத்து நீர் ஆதாரத்தைப் பெருக்கினார்.
ஆன்மிகத்திலும், தமிழிலும், மக்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், அமைச்சரின் அறிவுரையின் பேரில் எழுப்பிய அருள்மிகு பிரம்மேஸ்வரர் ஆலயம், காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிட்டது. மேலும், கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு கோட்டையும் பாழடைந்து மண் மூடிப்போனது. இன்றைக்கு கோட்டை இருந்த தடம்கூட இல்லை.
பல காலமாக சிதிலம் அடைந்திருந்த பிரம்மேஸ்வரர் கோயிலைப் புதுப்பித்து, நித்திய பூஜைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்பிய ஊர்மக்கள், தற்போது ஒரு கமிட்டி ஏற்படுத்தி திருப்பணியைத் தொடங்கி இருக்கிறார்கள்.
திருப்பணிக் கமிட்டியைச் சேர்ந்த லட்சுமிபதியிடம் திருப்பணிகள் குறித்துப் பேசினோம்.
‘‘ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கிய திருப்பணியில் சுவாமி கருவறை, அர்த்த மண்டபம், கருவறை விமான பணிகள் முடிஞ்சுடுச்சி. இன்னும் அம்பாள் சந்நிதி, மகா மண்டபம், மணி மண்டபம் வேலைகள் பாக்கி இருக்கு. போதுமான பொருளுதவி கிடைக்காததால் திருப்பணிகள் அப்படியே இருக்கு. தேவையான அளவுக்குப் பணம் வந்துட்டா, சீக்கிரமே திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகம் செஞ்சுடலாம். பிரம்மேஸ்வரர்தான் அருள்புரிய வேண்டும்’’ என்றார்.
பிரம்மன் வழிபட்டு அருள் பெற்ற சிவனாரின் ஆலயம் மீண்டும் பொலிவு பெற வேண்டாமா? நாளும் அங்கே நித்திய பூஜைகள் தடையின்றி நடக்க வேண்டாமா? சிறந்த சிவபக்தரான மூன்றாம் நந்திவர்ம பல்லவன் சிவபெருமானுக்கு எழுப்பிய திருக்கோயில் புதுப்பொலிவு பெற்றிட நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வது நம்முடைய கடமை. சிதிலம் அடைந்திருக்கும் சிவாலயங்கள் ஒவ்வொன்றும் புதுப் பொலிவு பெறும்போது, ஐயனின் அருளால் எல்லா வளங்களும் பூமியில் தழைத்துச் செழிக்கும். அந்த வளங்களை நம்முடைய சந்ததியினரும் அனுபவிப்பர்.
பொருளுதவி செய்யும் நமக்கு மட்டுமல்லாமல், நம் சந்ததியினருக்கும் அருள்புரியும் பிரம்மேஸ்வரரின் திருக்கோயிலுக்கு நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து, ‘ஆலம்தான் உகந்து அமுது செய்தானும், ஆதியானவனும், அமரர் தொழுதேத்தும் சீலம்தான் உடையானு’மாகிய ஐயனின் பேரருள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கிடைக்கச் செய்வோம்.
எப்படி செல்வது?
ஊர்: வேலூர்பாளையம்
சுவாமி: ஸ்ரீபிரம்மேஸ்வரர்
அம்பாள்: ஸ்ரீபிரம்மாம்பிகை
தலச் சிறப்பு: பிரம்மதேவர் வழிபட்ட தலம்
எங்கிருக்கிறது?: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து கனகம்மா சத்திரம் செல்லும் சாலையில், அரக்கோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.