குருபெயர்ச்சி பொதுபலன்கள் குறித்து பார்ப்போமா!

குருபெயர்ச்சி பொதுபலன்கள் குறித்து பார்ப்போமா!

மகரிஷிகளுக்கும், யோகி மற்றும் தவசிகளுக்கும் உரியவர் இந்த குருபகவான்தான். வேதங்களுக்கும், வேதாந்த ஞானத்துக்கும், தெய்வத்துக்கும், தெய்விக அறிவுக்கும் காரணமாய் இருப்பதும் இவர்தான். கொடுத்த வாக்குறுதியை தப்பாமல் நிறைவேற்றும் அன்பர்களது மனசாட்சியில் திகழ்பவரும் குருபகவான்தான்.

இன்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் முதலான சமூக வலைதளங்களை உபயோகித்தாலும் அவற்றிலுள்ள நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் நற்பண்புகளைத் தருபவர் இந்த குருபகவான்தான். தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இணங்க பொற்றோரை மதித்து வாழும் பிள்ளைகளின் உள்ளத்தில் இருப்பவர் இந்த குருபகவான் தான்.

பெற்றோரின் தலையில் கல்விக்கட்டணம் எனும் சுமையை அதிகம் திணிக்காமலும், அதேநேரம் ஆசிரியர்களுக்குப் போதுமான ஊதியத்தை வழங்கி தொண்டுள்ளத்துடன் கல்வி நிறுவனத்தை நடத்தும் அன்பர்கள் உண்டு எனில், அவர்களில் இதயத்தில் குடிகொண்டு வழிநடத்துபவர் இந்த குருபகவான்தான்.

வழிபாட்டுத் தலங்கள், யோகா, தியான மையங்கள் மற்றும் இயற்கை உணவு கூடங்களில் எல்லாம் வியாபித்திருப்பவர், வங்கிகள், தங்க நகைக் கடைகள், கோ சாலைகள், வேத பாட சாலைகள் ஆகியவற்றை ஆள்பவர் குருபகவானே.

நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 17-ம் தேதி சனிக்கிழமை (2.9.17) அன்று, சுக்ல பட்சத்து ஏகாதசி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம் நிரம்பி, ஜீவனம் மறைந்த சித்த யோகத்தில், சூரிய ஹோரையில் – இரண்டாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில் கோழி ஊன் கொள்ளும் நேரத்தில், தட்சிணாயனப் புண்ய கால வர்ஷ ருதுவில், காலை 9.25 மணிக்கு துலாம் லக்னத்தில், வேதாந்த ஞான கிரகமான வியாழ பகவான் எனும் குரு பகவான் கன்னி ராசியிலிருந்து சர வீடான துலாம் ராசிக்குள் சென்று அமர்கிறார். 2.10.18 வரை அங்கு அமர்ந்து தனது அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.

கடந்த ஓராண்டு காலமாக கன்னி ராசியில் அமர்ந்து அரசியலில் சதுரங்க ஆட்டம் ஆடினார். வலுவான கட்டமைப்புள்ள பல கட்சிகளை உடைத்தார். பணப்புழக்கத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒருங்கிணைந்த வரி விதிப்புகளையும் ஏற்படுத்தினார்.

2.9.17 முதல் 2.10.18 வரை உள்ள காலகட்டத்தில், களத்திரக் காரகனான சுக்ரன் வீடான துலாத்தில் அமர்வதால், மக்கள் சின்ன சின்ன ஆசைகளுக்கு அடிமையாவார்கள். சொந்த வீடு, வாகனம் வாங்குவதை வாழ்வின் குறிக்கோளாக மக்கள் நினைப்பார்கள். பாரம்பர்ய, பண்பாட்டு கலாசாரங்களிலிருந்து பலர் நழுவிச் செல்வார்கள். சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த துறைகளில் அடிக்கடி குழப்பங்களும், வேலை நிறுத்தங்களும் ஏற்படும். புகழ்பெற்ற முன்னனி சினிமா கலைஞர்களுக்கு பாதிப்பு உண்டாகும்.

மழைப்பொழிவு சீராக இல்லாமல் போகும். ஒரு பக்கம் வறட்சி ஏற்பட்டால், மறுபக்கம் வெள்ளப் பெருக்கால் பாதிப்பு உண்டாகும். பெண்களின் கை ஓங்கும். எனினும், பெண் குழந்தைப் பிறப்பு குறையும். அனைத்துத் துறைகளிலும் ஆன்மிகத்தில் உள்ளவர்கள் சாதித்துக் காட்டுவார்கள். சில வங்கிகள் மூடப்படும். வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரிக்கும்.

குரு பகவான் ஐந்தாம் பார்வையால் சனி வீடான கும்ப ராசியை பார்ப்பதால் வாகனத் துறை வளர்ச்சியடையும். ஷேர் மார்க்கெட் சூடு பிடிக்கும். சுயதொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை உயரும். அன்னிய முதலீடுகள் அதிகமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள். புது நிலக்கரி சுரங்கங்கள் கண்டறியப்படும். எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகமாகும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். பெட்ரோல், நிலக்கரி வளங்களை கண்டறியும் வகையிலும், எல்லைப் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் நவீன செயற்கைகோள்களை நம் நாட்டு அறிவியல் அறிஞர்கள் விண்ணில் செலுத்துவர். மலை, காடு செழிக்கும். வனவிலங்குகள் பாதுகாக்கப்படும்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் மேஷ ராசியைப் பார்ப்பதால் நிலத்தின் விலை உயரும். ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடுபிடிக்கும். மருந்து விலைக் குறையும். மருத்துவத்துறையினர் சாதிப்பார்கள். பொறியியல் துறையைவிட மருத்துவக் கல்வியை மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பார்கள். ராணுவத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும். அதிநவீன மற்றும் அதிதூரம் சென்று இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்குப் புதிய மருந்துகள் கண்டறியப்படும். நாடெங்கும் சோலார் மின் திட்டம் பரவலாக்கப்படும்.

குரு பகவான் ஒன்பதாம் பார்வையால் புதன் வீடான மிதுன ராசியைப் பார்ப்பதால் மீடியாக்களின் கை ஓங்கும். வதந்திகள் அதிகமாகும். மக்களிடையே புத்தகம் படிக்கும் குணம் அதிகரிக்கும். சர்ச்சைக்குரிய புத்தகங்கள் வெளியாகி பிரபலமாகும். மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தேர்வு முறை எளிதாகும். ஆனால் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறையும். அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை கட்டுப்படுத்தவும், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்கள் வரும்.

பரிகாரம்: வியாபார வீடான துலாத்தில் குரு அமர்வதால் பாரம்பர்ய தொழில், குடும்பத் தொழில், குலத் தொழிலை அலட் சியப்படுத்தாமல் தொழில்துறையை நவீனப்படுத்த வேண்டும். நீதி வீட்டில் குரு அமர்வதால், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றங்களை அணுகும் போக்கினை மாற்றி, சிறிய சச்சரவுகளை எல்லாம் நமக்கு நாமே பேசித் தீர்த்துக்கொள்வது சிறப்பு. மேலும் தொண்டுள்ளத்துடன் இயன்ற வரையிலும் உணவுக்கும், கல்விக்கும் உதவிகள் செய்வதாலும், எதிலும் நேர்மையுடன் நடந்துகொள்வதாலும் துலா குருவின் அனுக்கிரகத்தைப் பெற்றுச் சிறக்கலாம்.

Leave a Reply