குரூப் 1 நேர்முகத்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய அறிவிப்பு!

குரூப் 1 நேர்முகத்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய அறிவிப்பு!

2016-ம் ஆண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில், நேர்முகத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாநில தொகுதி I (குரூப் 1) பணியில் அடங்கிய 85 பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 9.11.2016-ம் நாளிட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டு முதல்நிலை எழுத்துத் தேர்வானது கடந்த 19.02.2017 அன்று முற்பகல் நடத்தப்பட்டது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் கடந்த 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய 3 தினங்களில் நடைபெற்ற முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டனர். முதன்மை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற 176 விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 31.12.2018 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மேலும், முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு தேர்வாணைய அலுவலகத்தில் (முகவரி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வாணையச் சாலை (அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை – 600 003) வரும் 21.01.2019 முதல் 25.01.2019 வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத்தேர்விற்கான குறிப்பாணையினை (NOTICE OF INTERVIEW) www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும், முழுத் தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது.

Leave a Reply