குற்றங்களைக் கண்டுபிடிக்கும் தடய கட்டிடவியல்

குற்றங்களைக் கண்டுபிடிக்கும் தடய கட்டிடவியல்

3தடய அறிவியல் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். தடய அறிவியல் என்பது அறிவியலின் துணைகொண்டு குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு துறை. அதுபோல் ஒரு துறையல்ல தடய கட்டிடவியல் (Forensic Architecture). ஆனால் தடய அறிவியலை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தத் தடய கட்டியவியலைப் புரிந்துகொள்லலாம். அதாவது கட்டிடங்களுக்குள்ளான, கட்டிடங்களாலான மனித உரிமை மீறல்களைக் கண்டுபிடிக்கும் துறை எனச் சொல்லாலம். ஆனால் தடய அறிவியல்போல் இது படிப்பாக இன்னும் வரவில்லை. இங்கிலாந்தில் கோல்டுசுமித் என்னும் இடத்தில் இந்த தடய கட்டிடவியல் என்னும் பெயர் கொண்ட நிறுவனம் இருக்கிறது.

இந்த நிறுவனம் உலகமே நவீன மயமாகிவரும் சூழலில் நகரங்களில் உள்ள கட்டிடங்களிலான மனித உரிமை மீறல்களை, உலக மனித உரிமைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரிப்பதை முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் சிரியா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்த நிறுவனம் ஆராய்ந்துள்ளது.

கடந்த வாரம் உலக மன்னிப்புச் சபைக்காக இந்த நிறுவனம் சிரியாவில் இருந்த சித்திரவதை முகாமின் முப்பரிணாம வடிவை வெளியிட்டது. சய்ட்னாயா சித்திரவதை முகாமில் சர்வதேச விதிகளுக்குப் புறம்பாகக் கைதிகள் நடத்தப்பட்டுள்ளனர். கொடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நான்கு கைதிகள் இருக்க வேண்டிய சிறையறையில் நூற்றுக்கணக்கான கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். இதுமாதிரியான சித்திரவதையிலிருந்து மீண்டு வந்தவர்களிடம் நேர்காணல் கண்டு அவர்கள் சொல்லியதை வைத்து அந்தச் சித்திரவதை முகாமின் வரைபடைத்தை உருவாக்கியுள்ளனர். சிரியத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்தச் சித்திரவதை முகாம் உருவாக்கப்பட்டுள்ளது.

“இந்தச் சித்திரவதை முகாமில் கட்டிட பாணியே சித்திரவதைக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” ஐயல் வைஸ்மேன் என்னும் தடய அறிவியல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார். அங்கிருந்து மீண்டவர்கள், உருவாக்கப்பட்ட இந்த மாதிரி வடிவத்தைப் பார்க்கும் தங்களுக்கு அந்தக் கொடுமையான காலகட்டம் நினைவுக்கு வருவதாகச் சொல்லியுள்ளனர்.

இம்மாதிரியான மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படும் என்பது இந்நிறுவனத்தின் இலக்கு.

Leave a Reply