குளிர்காலத்தில் உடலின் வெப்ப நிலை குறைவதன் காரணமாக தசைகள் இறுக்கமடையும். மூட்டுகள் விறைப்படையும். மூட்டு வலி பிரச்சினையும் தலைதூக்கும். அதனை தவிர்க்க குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய அவசியமான உணவு பட்டியல்களின் தொகுப்பு இது.
தினை:
தினை வகைகளில் நார்ச்சத்தும், அமினோ அமிலமும் நிறைந்துள்ளது. குர்செடின் எனும் சேர்மமும் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் இது மூட்டு வலியை குறைத்து உடலை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்க உதவும். தினை வகைகளில் ராகியை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நெய்:
இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை மூட்டு விறைப்படைவதை குறைக்க உதவுகிறது. மற்றும் மூட்டுகளில் உராய்வு மற்றும் வீக்கத்தை தணிக்க உதவுகிறது.
நட்ஸ் வகைகள்:
பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் இது உதவும். மேலும் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் துணை புரியும்.
பச்சை இலை காய்கறிகள்:
குளிர்காலத்தில் பச்சை இலைக் காய்கறிகள் எளிதாகக் கிடைக்கும். அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தவை. அவற்றில் சல்போராபேன் உள்ளது. இது எலும்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. பச்சை இலை காய்கறிகளை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது நல்லது. சூப்பாக தயாரித்தும் உட்கொள்ளலாம். அது எளிதில் உடலில் உறிஞ்சப்படும்.
எலும்பு சூப்:
ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் எலும்பு பகுதிகளை வேக வைத்து சூப்பாக தயாரித்தும் பருகலாம். இந்த எலும்பு சூப்பில் தாதுக்கள், குளுக்கோசமைன் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும்.
இஞ்சி – பூண்டு:
மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் கிருமி நாசினியாக இவை அறியப்படுகின்றன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டிருக்கின்றன. இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து உணவில் பயன்படுத்தலாம். இஞ்சி டீ பருகலாம்.