குழந்தைகளுக்கு ஏற்படும் திக்குவாய் குறைபாடு

குழந்தைகளுக்கு ஏற்படும் திக்குவாய் குறைபாடு
baby
குழந்தைப் பருவத்தில், பொதுவாக சரளமாக பேச முடியாமல், குழந்தைகள் சொன்ன வார்த்தை/ஒலியைத் திரும்ப திரும்ப சொல்வதைப் பார்த்திருப்போம். 2லிருந்து 5 வயது வரை உள்ள பெரும்பாலான குழந்தைகள் பேச திக்குவது சகஜம்.

அதற்குப் பின்னரும் 3-6 மாத காலம் வரை தொடர்ந்து திக்கினாலோ, பேசுவதில் சிக்கல்களை எதிர்கொண்டாலோ, சிகிச்சை அவசியம். இவ்வகை குறைபாடு ஆண் குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. பின்வரும் அறிகுறிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை அடிக்கடி காணப்பட்டால், குழந்தைக்கு திக்குவாய் பிரச்னை இருக்கலாம்.

அறிகுறிகள் மற்றும் விளைவுகள் :

வார்த்தையை நிறுத்தி நிறுத்தி பேசுவது (வார்த்தையின் ஒரு பகுதியை சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திவிடுவது/மீதி வார்த்தையை சொல்லி முடிக்க முடியாமல் திணறுவது).பேசும் போது நடுநடுவே ஏற்படும் மௌன இடைவெளி அல்லது அவ்வித இடைவெளியில் வேறு ஒலியை (அ, ஆ, உ) பயன்படுத்துவது.

ஒரு வார்த்தைக்கு நடுவே நீண்டநேரம் உயிர்மெய் ஒலிகளை ஏற்படுத்துவது.வாக்கியத்தில் அடுத்தடுத்த வார்த்தைகளை சொல்லாமல் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்வது.பேசும் போது அதிகப்படியான உடல் பதற்றம் ஏற்படுவது.

கடினமான வார்த்தைகளுக்கு பதில் வேறு வார்த்தைகளை பயன்படுத்துவது.திக்குவாய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் உடல்ரீதியான அறிகுறிகள் பேசும் போது அதிகமாக கண்ணை சிமிட்டுவது. தலை மற்றும் கை, கால்களை ஆட்டுவது. முக நடுக்கம். குரல் நடுக்கம்… குழந்தை உணர்ச்சிவசப்படும் போதோ /சோர்வாக இருக்கும்போதோ இவ்வித அறிகுறிகள் மேலும் மோசமடையும்.

இதுபோன்ற குழந்தைகள் பழக்கமில்லாத புது ஆட்களுடன் பேசுவதை தவிர்த்துவிடும். அப்போது, அவர்களைப் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தினால், அறிகுறிகள் அதிகப்பட்டு, அதீத பதற்றத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி விடும். அதனால், குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி பேச வைப்பதன் மூலம் இவ்விதக் குறைபாடை, சரிசெய்ய முடியாது. குழந்தை பேசத் திணறும் போது, பெற்றோர்அவர்களுக்கு நேரம் கொடுத்து பேச ஊக்குவிக்க வேண்டும்.

பிறர், குழந்தையின் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை அனுமதிக்கவே கூடாது. இவ்வித குறைபாடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதால், கல்வி, வேலை, சமூக வாழ்க்கை போன்றவற்றை வெகுவாக பாதிக்கிறது.

காரணம் மற்றும் சிகிச்சை :

திக்குவாய் குறைபாடு, குடும்பத்தில் பரம்பரையாக அதிகம் காணப்படுவதால், இதற்கு மரபணு முக்கிய காரணியாக இருக்கலாம். இக்குறைபாடு, ஒருசில மாதங்கள் நீடிக்கலாம். அல்லது பல வருடங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். ஒருசில குழந்தைகளுக்கு, திக்குவாய் பிரச்னை வாழ்நாள் முழுவதும் நீடித்து, பெரும்பாலும் மோசமும் அடையலாம்.

திக்குவாயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், அதன் தீவிரத்தை குறைத்து, சரளமாக பேச உதவ முடியும். இதற்கு ஸ்பீச் தெரபிஸ்ட் (Speech Therapist) மற்றும் உளவியல் ஆலோசகர்களின் (Psychologist) பங்கு மிகவும் அவசியம். பிரச்னையின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை தேவைப்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் திக்குவாய் குறைபாடு வாழ்நாள் பிரச்னையாக ஆவதைத் தடுக்க முடியும்.

சமூக பேச்சுத் திறன் குறைபாடு (Social Communication Disorder)குழந்தைகள், இடம், பொருள் அறிந்து, சமூக சூழ்நிலைக்கு ஏற்ப பேசவோ/புரிந்து கொள்ளவோ தெரியாமல் இருந்தால், சமூக பேச்சுத் திறன் குறைபாடு இருக்கலாம். இதனால், பாதிக்கப்பட்டவருக்கு கல்வி, வேலை, சமூகத்தில் பழகுதல், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் பிரச்னை ஏற்படக்கூடும்.

இக்குறைபாட்டின் அறிகுறிகள், குழந்தைப் பருவத்திலேயே தொடங்கினாலும், சமூகத்திறன்களை வெளிப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்போதுதான் வெளித்தெரிய வரும். இதைக் கண்டறியும் முன்னர், நரம்பியல் கோளாறு, ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு அல்லது வேறு மனநல கோளாறுகள் போன்ற கோளாறுகளால் இந்த அறிகுறிகள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தன்னிடம் பேசுபவரின் தன்மை/பின்னணி, பேசும் இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பேசும் பாணியை மாற்றிக் கொள்ள இயலாமை. (உதாரணம்… விளையாட்டு மைதானம் மற்றும் வகுப்பில், வெவ்வேறு விதமாக பேசுவது மற்றும் குழந்தை/பெரியவரிடத்தில் வெவ்வேறு விதமாக பேசுவது).

உரையாடலின் போது பின்பற்றப்படும் வழிமுறைகளைக் (உதாரணம்… மற்றவர் பேசுவதற்கு அடுத்தடுத்து வாய்ப்பளிப்பது, சொல்வதை மற்றவர் தவறாக புரிந்து கொண்டால், அதைத் திரும்பவும் புரியும்படி சொல்வது மற்றும் உரையாடலை ஒழுங்குப்படுத்தக்கூடிய வாய்மொழி மற்றும் சைகை சமிக்ஞைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல்) கடைப்பிடிப்பதில் சிரமம். மற்றவர்கள், மறைமுகமாக/சூசகமாக சொல்வதை புரிந்து கொள்ள முடியாத தன்மை.

காரணி மற்றும் சிகிச்சைசமூக பேச்சுத் திறன் குறைபாட்டின் சரியான காரணம் கண்டறியப்படவில்லை. இவ்வகை குறைபாடுகள் உள்ளவர்களின் குடும்ப நபர்கள் பெரும்பாலும், கற்றல் குறைபாடு/ஆட்டிசம்/மொழித்திறன் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இக்குறைபாடு ஏற்படுவதற்கு மரபணு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.குழந்தையின் தேவைக்கேற்ப அவர்களுக்கான சிகிச்சையை மனநல நிபுணர் வடிவமைப்பார்.

பொதுவாக, இக்குழந்தைகளுக்கு சமூகத் திறன் (Social Skills) பயிற்சி தரப்படும். இவர்களின் அதீத உணர்ச்சிகளை சமாளிக்க அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy) அளிக்கப்படும். மொழிப் பயிற்சி (Speech Therapy) மூலம் நடைமுறைக்கேற்றவாறு பேசக் கற்றுக் கொடுக்கப்படும்.

இவ்வகை குறைபாட்டுக்கு நிரந்தர தீர்வு கிடையாதென்றாலும், பயனுள்ள சிகிச்சை மூலம், குழந்தைகள் பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க கற்றுக்கொள்ள முடியும். சிகிச்சை மூலம் கற்ற திறன்களை தொடர்ந்து பயிற்சி செய்தால், தங்களுக்கு சவாலாக இருக்கும் சமூகச்சூழலை இவர்களால் சமாளிக்க முடியும்.

8 வயது ஆகும்போது, முழுவதுமாக வார்த்தையில் உள்ள கடினமான ஒலிகளை சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.சமூக பேச்சுத் திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவருக்கு கல்வி, வேலை, சமூகத்தில் பழகுதல், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

Leave a Reply