குழந்தைகள் விரும்பும் மதிய உணவு: மசாலா இட்லி

குழந்தைகள் விரும்பும் மதிய உணவு: மசாலா இட்லி

அப்படி, இப்படியென இழுத்தடித்து எப்படியோ ஒரு வழியாக முடியப்போகிறது கோடை விடுமுறை. பள்ளி திறக்கவிருப்பதால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளைப் பல வீடுகளிலும் செய்யத் தொடங்கியிருப்பார்கள். “பள்ளி திறக்கப்போகிறதே என்று குழந்தைகள் கவலைப்பட்டால், அவர்களுக்குத் தினமும் மதிய உணவுக்கு எதைச் சமைப்பது என்ற கவலை பெற்றோருக்கு. தினமும் செய்கிற பதார்த்தங்களையே கொஞ்சம் மாற்றிச் செய்தால் புதுவகை உணவு தயார்” என்று சொல்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். சுவையும் சத்தும் நிறைந்த மதிய உணவு சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.

மசாலா இட்லி

என்னென்ன தேவை?

இட்லி – 4

வெங்காயம், தக்காளி – தலா 2

பட்டாணி – கால் கப்

இஞ்சி – ஒரு துண்டு

பச்சை மிளகாய் – 2

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டுத் தாளியுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் இஞ்சி விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள். பட்டாணி, தக்காளித் துண்டுகள் போட்டு வதக்குங்கள். கலவை நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி கலந்து ஒரு நிமிடம் வேகவிடுங்கள். பிறகு கால் கப் தண்ணீர் விட்டுக் கொதித்து, எல்லாமே சேர்ந்தார்போல வந்ததும் இட்லியைத் துண்டுகளாக்கிச் சேருங்கள். நன்றாகக் கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள்.

Leave a Reply