குழந்தைகள் விளையாடட்டும்
கோடை விடுமுறை விட்டாச்சுன்னா போதும்… சாப்பாடு, தண்ணி இல்லாம ஒரே விளையாட்டு்தான். ஒருகாலத்தில், “காலையிலேயே விளையாடப் போனவன். இன்னமும் வீட்டுக்கு வரலை. மதியம் சாப்பிடாமக்கூட அப்படி என்னதான் விளையாட்டோ?’’ எனப் பெரும்பாலான வீடுகளில் அம்மாக்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். இன்று நிலையே வேறு. காலையில் தாமதமாக எழுந்து, காலை உணவைத் தவிர்த்துவிட்டு குளிர்பானங்களை அருந்திக்கொண்டே, நொறுக்குத்தீனிகளைக் கொறித்தபடி சில மணி நேரம் டி.வி முன் அமர்ந்திருக்கிறார்கள். பின்னர், கம்ப்யூட்டர் கிளாஸ், சம்மர் லீவ் ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் என்று அலைந்து, சோர்வாக வீட்டுக்கு வந்து மொபைல் கேம்ஸ் விளையாடிவிட்டு, ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் சாட்டிங் செய்தபடியே உறங்கிப்போகின்றனர்.
சிறுவர்கள் நன்றாக ஓடியாடி தெருவிலும் மைதானத்திலும் விளையாடிய அந்தக் காலத்தில் 45 வயதில் கூட நோய்கள் அண்டவில்லை. ஆனால், 40 வயதைத் தாண்டி வரக்கூடிய வாழ்வியல் நோய்களான உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவை எல்லாம், தற்போது வெறும் 25 – 30 வயதிலேயே வர ஆரம்பித்துவிட்டன. உடல் உழைப்பும் இல்லாமல் விளையாட்டும் இல்லாமல் சிறுவர்களின் உடல்நிலை பருவ வயதுகளில் இருந்தே பாதிக்க ஆரம்பிக்கிறது. கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில் நகரங்களில் ஏகப்பட்ட வெக்கேஷன் கோச்சிங் சென்டர்களில் சிறுவர் சிறுமியரைக் காண முடிகிறது. பல பெற்றோர்கள் குழந்தைகளின் வாழ்க்கை என்பதே வெறும் படிப்பும் மதிப்பெண்களும் மட்டும் எனச் சொல்லி வளர்க்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் சரியான வேலையின்றி அவதிப்படுபவர்களும் உண்டு. மதிப்பெண் சரியாக எடுக்கவில்லை என்றாலும் வாழ்க்கையில் சாதித்தவர்களும் உண்டு. அதற்கு குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமான விஷயத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எப்போதுமே பிடித்தமான விஷயம், விளையாட்டு. சிறுவயதில் இருந்தே நன்றாக ஓடியாடி விளையாடினால், உடலில் தேவையற்ற கொழுப்புச் சேருவது இயல்பாகவே தடுக்கப்படும். மாணவர்களை, மார்க் எடுக்கும் இயந்திரமாக மாற்ற முயற்சிப்பதன் விளைவாக, வீட்டிலும் பள்ளியிலும் விளையாடவே முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. உடல் உழைப்பே இல்லாமல் வெகு சிறு வயதிலேயே வளர்சிதை மாற்றம் பாதிக்க ஆரம்பிக்கிறது.
இன்றைக்கு, கூட்டாக இணைந்து செயலாற்றும் தன்மை தற்போது குழந்தைகள் மட்டும் இன்றி எல்லோருக்குமே குறைந்துவருகிறது. அதேநேரம், மீடியா இன்ட்ராக்ஷன் அதிகரித்துவிட்டது. மீடியா என்றால் டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது மட்டும் அல்ல, லேப்டாப், கணிணி, மொபைல், ஐ.பேட் என எங்கும் டிஜிட்டல் சாதனங்களையே அதிகம் உபயோகிப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, சமூக வலைதளங்களில் படங்கள், எழுத்து, வீடியோ, ஆடியோ மூலம் தொடர்புகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவது எல்லாமே இதில் அடங்கும்.
தற்போதைய நிலையில் சிறுவர்கள் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். ஆனால், சோஷியல் மீடியாவில் நன்றாகப் பழகிய நபரை நேரில் பார்த்தால் நன்றாகப் பேச மாட்டார்கள். மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அனுபவமே இல்லாமல் போவதால், பிற்காலத்தில் சிறுசிறு விஷயங்களிலும் முடிவெடுப்பதில் தடுமாற்றம் அடைகிறார்கள்.
சிறுவர்கள் நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது சக நண்பரை எப்படி அணுக வேண்டும், மனிதர்களை எப்படி அணுக வேண்டும், ஏன் கூட்டு முயற்சி தேவை, எப்படி ஒரு குழுவை ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்வது, வெற்றி, தோல்வியை அணுகுவது எப்படி என்பதைப் போன்ற மேலாண்மை பாடங்களைக்கூட தங்களையே அறியாமல் நேரடி அனுபவம் வாயிலாக அறிந்துகொள்கிறார்கள். நேரடியாகச் சந்தித்து நண்பர்களுடன் அதிகம் பழகுவதே நல்லது. நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது இயல்பாகவே புத்துணர்ச்சி பெருகும். ஹியூமன் இன்ட்ராக்ஷன் எனச் சொல்லப்படும் மனிதர்களுடன் பழகும் தன்மை அதிகரிக்கும். கூட்டாக இணைந்து செயலாற்றும் திறன் வளரும்.
ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டும்தான் விளையாட வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. படிப்பைப் போலவே விளையாட்டுக்கும் ஒவ்வொரு வாரத்துக்கும் தேவையான குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விளையாடுவதே சிறந்தது.
வெயில் காலத்தில், அதிக வெயில் அடிக்கும் இடங்களில் வசிப்பவர்கள் காலை 10 மணி முதல் நான்கு மணி வரை வெயில் படுமாறு விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு மேலும் மைதானங்களில் சிறுவர் சிறுமியரை விளையாட பெற்றோர்கள் அனுமதிக்கலாம்.
மற்ற நேரங்களில் டேபிள் டென்னிஸ் , கேரம், செஸ் போன்ற உட்புற விளையாட்டுகளை (Indoor games) விளையாடலாம்.
கோடையில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவதில் தவறு இல்லை. ஆனால், அவர்களை விளையாடவே அனுமதிக்காமல் இத்தகைய வகுப்புகளுக்கு அனுப்புவதுதான் தவறு.
பியானோ, நடனம், அபாகஸ், பெயின்டிங், இந்தி, ஃபிரெஞ்ச் வகுப்பு என்று ஏராளமான சிறப்பு பயிற்சி வகுப்புகள் இருந்தாலும், குழந்தைக்கு பிடித்தமானதில் சேர்க்கலாம்.
சும்மா இருக்கிறார்கள் என்பதற்காக, எல்லா வகுப்பிலும் சேர்த்துவிடவது வேண்டாமே!
கேம்ப் நல்லதா?
விடுமுறை தினங்களில் பல்வேறு கேம்ப், பிரத்யேக வகுப்புகள் போன்றவற்றுக்கு பெற்றோர்கள் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஆறேழு மணி நேரம் அங்கேயே குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள். சிறுவர், சிறுமியருக்கு விருப்பம் இல்லாத சூழ்நிலையில் சிறப்பு வகுப்புகளில் சேர்த்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிரத்யேக வகுப்புகள், டியூஷன், கேம்ப் என அட்டவணை போட்டு விடுமுறை தினத்தை குழந்தைகள் இப்படித்தான் செலவழிக்க வேண்டும் என வற்புறுத்தாதீர்கள். ஆரோக்கியமான, நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி, அவர்கள் சம்மதத்துடன் அவர்களை எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள அனுமதிப்பதே புத்திசாலித்தனம். ஒரே வருடத்தில் எல்லா கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் திணிக்கக் கூடாது.
வீடியோ கேம்ஸ்
டி.வி, லேப்டாப் போன்றவற்றில் வீடியோ கேம்ஸ்க்கும், மொபைல் கேம்ஸ்களுக்கும் பல குழந்தைகள் அடிமையாக இருக்கிறார்கள். தன்னைக் குழந்தைகள் தொந்தரவு செய்யக் கூடாது என்பதால், மொபைலை கொடுத்து கேம்ஸ் விளையாட அனுமதிக்கின்றனர் சில பெற்றோர். வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் போன்றவற்றில் நேரம் போவதே தெரியாது. இதுபோன்ற கேம்ஸ் அதிகமாக விளையாடும்போது கண்கள், விரல்கள், முதுகுத்தண்டு போன்றவை பாதிக்கப்படுகின்றன. எனவே, ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள். வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனச் சிறுவர்களுக்குச் சொல்லிப் புரியவையுங்கள். நான்கு சுவருக்குள் உட்கார்ந்து விளையாடுவதைவிட பொது வெளியில் நண்பர்களோடு இணைந்து விளையாடுவதே நல்லது.
விடுமுறையை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது எப்படி?
ஏதாவது ஒரு வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் போரடித்துவிடும். பிறகு, அந்த வேலையில் நாட்டம் குறைந்துவிடும் என்பதால்தான் பள்ளிகளில் மாணவர்களுக்கு எப்போதுமே ஒரு மாதம் முழு விடுமுறை தரப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் வெப்பமான நாடுகளில் வெயில் காலங்களிலும், பனிப்பிரதேச நாடுகளில் குளிர் காலங்களிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறையில் ஏதாவது ஒரு புதுக் கலையைக் கற்றுக்கொள்வது, புது மொழியைக் கற்றுக்கொள்வது போன்றவை நல்லது. உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், யோகா, தியானம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளலாம். சராசரியாக தினமும் இரண்டு மூன்று மணி நேரம் வரை விளையாட்டுக்கு ஒதுக்கலாம். விடுமுறை தினங்களில் தினமும் எட்டு மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்து பழக வேண்டும். கோடை விடுமுறையை முடிந்தவரை உற்சாகமாகக் கழிப்பது அடுத்த ஆண்டு பள்ளியில் கல்வி பயில நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.
விளையாடுவதால் ஏற்படும் நன்மை
விளையாடுவதால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல பலன்கள் உள்ளன.
உடலின், வளர்சிதை மாற்றம் சீராகும்.
உற்சாகமாக விளையாடும்போது எண்டார்பின் போன்ற மன மகிழ்ச்சி தரக்கூடிய ஹார்மோன்கள் நன்றாகச் சுரக்கும்.
மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசால், அட்ரினல் ஹார்மோன்கள் சுரப்பு கட்டுக்குள் இருக்கும்.
உடலில் புரதச்சத்தை செல்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும். இதனால், உடல் ‘ஃபிட்’ ஆகும்.
அதீதப் பதற்றம் இல்லாமல், மகிழ்ச்சியாக விளையாடும்போதுதான் உடலுக்கு இந்த நன்மைகள் நடக்கும்.