குழந்தைபேறு இல்லாதவர்கள் கும்பிட வேண்டிய சங்கரராமேஸ்வரர் திருக்கோவில்
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கோவில். இத்தலத்து இறைவனின் பெயர் சங்கரராமேசுவரர். இறைவி பாகம்பிரியாள். இங்குள்ள தீர்த்தம் வாஞ்சா புஷ்கரணி. தல விருட்சம் வில்வ மரம்.
இத்திருக்கோவிலை காசிப முனிவர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றார்கள் என்று வழி, வழியாக தல புராண செய்திகள் கூறுகின்றன. தெய்வீக பயணமாக திருச்செந்தூர் வேலவனை வழிபட வந்த காசிப முனிவர் சோலை மிகுந்த இந்த ஊரை கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருள செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும், அதுவே சங்கரராமேசுவரர் கோவில் என்றும் குறிப்பிடுகின்றனர்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடக் கிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் தெய்வானை திருமண படலத்தில் விரிவாக இதனை விளக்குகிறார். சிவனும், பார்வதியும் தங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கிய மணமக்களை மார்புறத்தழுவி வாழ்த்துகின்றனர்.
முருகப்பெருமானின் திருமணத்தை கண்டு களிக்க வந்த சிவபெருமானும், பார்வதி தேவியும் சோலை சூழ்ந்த இவ்வூருக்கு எழுந்தருளி தங்குகின்றனர். அச்சமயம் உமையாள், சிவபெருமானிடம் வேதங்களின் விழுப்பொருளாகிய திருமந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டுகிறார். இறைவனிடம் அம்பிகை உபதேசம் பெற்ற திருத்தலமாதலின் இவ்வூர் திருமந்திர நகர் என வழங்கப்பட்டது.
பாண்டிய மன்னராட்சியின் பிற்கால பாண்டிய மரபில் வந்த குறுநில மன்னரான சந்திர சேகர பாண்டியனின் புதல்வரான சங்கரராம பாண்டியன், கயத்தாறை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான். மன்னர் குலம் தழைக்க, மனை விளங்க மழலை செல்வம் இல்லாது வருந்தினான். மன்னனின் வருத்தத்தை கண்ட பெரியோர்கள், காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று புனித நீராடி வருமாறு கூறினார்கள்.
இதன்படி மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராட செல்லும்போது, இறைவனது குரல் அசரீரியாக, ‘வேந்தே! நீ, திருமந்திர நகரில் உள்ள வாஞ்சா புஷ்கரணி என்ற தீர்த்தத்தில் நீராடி. அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா’ என ஒலித்தது.
அதன்படி மன்னன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடியவுடன் அசரீரி மீண்டும், ‘அரசே! காசிப முனிவரால் ஸ்தாபனம் செய்து பூஜிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு திருக்கோவில் எழுப்புவாயாக’ என்று கூறியது. இறைவனின் கட்டளைக்கு ஏற்ப மன்னரால் இத்திருக் கோவில் கட்டப்பட்டது.
இத்திருக்கோவிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். பிள்ளைப்பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் தரும் அற்புத திருத்தலமாக இவ்வாலயம் திகழ்கிறது.
இங்கு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும். தினமும் ஐந்து கால பூஜைகள் இங்கு நடைபெறுகிறது.
சித்திரை 10 நாட்கள் நடைபெறும் திருவிழா, வைகாசி சண்முகர் புஷ்பாஞ்சலி, புரட்டாசி மாதம் நவராத்திரி விழா மற்றும் பாரிவேட்டை திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை திருவிழா, தைப்பூசம் தெப்பத்தேர் திருவிழா, மாசி மாத மகா சிவராத்திரி திருவிழா, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார், சிவ பெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி ஆகிய திருவிழாக்கள் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும்.