குழந்தை பெற்றால் குண்டம்மாதானா?!
‘ஏய்… பபிள்கம் சாப்பிட்டா கன்னம் கொஞ்சம் புஸ்னு ஆகுமாம்’, ‘மில்க் ஸ்வீட்ஸ், மூணே மாசத்துல வெயிட் கூட்டுமாம்’, ‘காட்டன் புடவை கட்டினா, கொஞ்சம் குண்டா தெரியலாம்ப்பா…’
– 20 ப்ளஸ் வயதில் மணப்பெண்ணாக மேடை ஏறும் தருணத்தில், தங்கள் ஒல்லி உடம்பை ‘கொஞ்சம் பூசினாப்ல’ ஆக்குவதற்கான கன்னிப் பெண்களின் மெனக்கெடல்கள் இப்படி பல.
இப்போது 30 ப்ளஸ் வயது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மற்றவர்களின் முன்னிலையில் எடையை சொல்லவே தயங்கும் அளவுக்கு வகைதொகையில்லாமல் வெயிட் கூடியிருப்பார்கள். ‘மாசமா இருக்கும்போது ஏறின எடை. குழந்தை பிறந்ததும் ரெண்டு மடங்கு ஆயிடுச்சு. அப்புறம் அவ்ளோதான்… குறைக்கவே முடியல’ என அதை உலகத்தின் பொதுவிதிபோல ஏற்றுக்கொள்வார்கள்.
உண்மையில், கர்ப்பகாலமும், பிரசவமும் பெண்களின் எடையை உடலியல்ரீதியாகவே நிரந்தரமாக அதிகரித்துவிடுமா? அல்லது, அது பெண்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விஷயம்தானா?
மதுரை, அப்போலோ மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹேமலதா, இந்தக் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார்….
‘‘பதின்வயதிலும், மணப்பெண், புதுப்பெண் தருணங்களிலும் மட்டுமல்ல… எத்தனை வயதானாலும் பெண்கள் தங்கள் உடம்பில், எடையில், ஆரோக்கியத்தில், அழகில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘அதான் ரெண்டு குழந்தையாயிடுச்சே… இனி என்னத்த டாக்டர்’ என்பதுதான் நம் பெண்களின் மனநிலையாக உள்ளது. உண்மையில், உங்களை நீங்கள் ஃபிட் ஆக வைத்துக்கொள்ளும்போது, வாழ்க்கையின் மீதான அலுப்பு நீங்கி, புத்துணர்வும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.
கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பது ஏன்..?
கர்ப்பகாலத்தில், எஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டொரான் உள்ளிட்ட ஹார்மோன்கள் பெண் உடலில் முக்கிய மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அதன் காரணமாக அவளுக்கு எடை அதிகரிக்கும். எனினும், அவை மட்டுமே அவளின் மொத்த எடைக்கும் காரணமல்ல. கர்ப்பகாலத்தில் பொதுவாக ஒரு பெண் 10 கிலோவில் இருந்து 12 கிலோவரை எடை கூடுவது இயல்பு. இதில் 3 கிலோ குழந்தையின் எடை, 3 கிலோ தொப்புள்கொடி, பனிக்குட நீர் உள்ளிட்டவற்றின் எடை. மீதமுள்ள எடை, அவள் உடலில் கூடும் எடை.
பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை!
குழந்தையுடன் பனிக்குட நீர், தொப்புள்கொடி போன்றவை வெளியேற்றப் பட்ட பிறகு, உண்மையில் அவள் குறைக்க வேண்டியது உடலில் சேர்ந்திருக்கும் 5, 6 கிலோ எடையை மட்டுமே. ஆனால், தவறான உணவுப் பழக்கங்கள், தேவைக்கும் அதிகமான ஓய்வு, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களால், குறை வதற்குப் பதிலாக அடுத் தடுத்த மாதங்களில் எடை கட்டுப்பாடின்றி கூடிவிடுகிறது. இதில் ஹார்மோன்களுக்குப் பங்கில்லை.
தவறுகள் என்னென்ன?
முன்பெல்லாம் பிரசவத்துக்கு முந்தின நாள்வரை இயல்பான வேலை களை செய்தனர். இன்றோ, கர்ப்பம் உறுதிபட்ட நாளில் இருந்து எந்தச் சிரமமும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்து, கர்ப்பகாலத்தில் அவசியமாகத் தேவைப்படும் உடல் அசைவுகளைக்கூடச் செய்வதில்லை. இன்னொரு பக்கம், அளவில்லாமல் உணவு உட்கொள்கிறார்கள். இவை இரண்டும், எடை அபரிமிதமாக அதிகரிக்க முக்கியக் காரணங்கள்.
சிறப்பு உணவு தேவையில்லை!
குழந்தைக்குப் பாலூட்டும் தாயை, ‘நல்லா சாப்பிடு… அப்போதான் பால் ஊறும்’ என்று சொல்லி, அவள் தேவைக்கும் அதிகமாக இரண்டு, மூன்று மடங்கு உணவை வைத்துத் திணிக்கும் குடும்பங்கள் இங்கு நிறைய. உண்மையில், அவளுக்குப் பாலூட்ட என்று எந்தச் சிறப்பு உணவும் தேவையில்லை. காரணம், பால் சுரப்பு என்பது உணவில் இல்லை. ப்ரொலாக்டின், ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள், பால் சுரப்பை அதிகரிக்கவல்லவை. இந்த ஹார்மோன்கள் தூண்டப்படுவதற்கு தேவை – உணவு அல்ல… தாயின் உணர்வு! அவளுக்கும் குழந்தைக்குமான ஸ்பரிசம், கதகதப்பு, சந்தோஷம் போன்ற தாய்மை உணர்வுகள் அவளுக்குள் ஏற்படுத்தும் பூரிப்பே, இந்த ஹார்மோன்களை இயங்கச் செய்யும்.
உடல்நிலைக் காரணங்களால் மிகமிக அரிதான சில தாய்மார்களுக்கே தன் குழந்தைக்குத் தேவையான பால் சுரப்பு இருக்காது.
கட்டுடல் சாத்தியமே!
நம்புங்கள்… சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும் 45 நாட்களில் பெண்ணால் கர்ப்பகாலத்துக்கு முந்தைய அவள் எடைக்குத் திரும்ப முடியும். என்ன செய்ய வேண்டும்?
* சுகப்பிரசவம், சிசேரியன் எதுவாக இருந்தாலும், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தே வயிற்றுக்கான மிதமான பயிற்சிகளை (டம்மி எக்சர்சைஸ்) ஆரம்பித்துவிடலாம். ஆறாவது மாதத்தில் இருந்து கடின உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* எப்போதும் சாப்பிடும் சரிவிகித உணவுடன், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கான மாத்திரைகள் மட்டும் எடுத்துக்கொண்டு பாலூட்டினால் போதுமானது. கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிரம்பிய சிறப்பு உணவுகள் தேவையில்லை.
* குழந்தைக்கு வேறு எந்த புட்டிப்பால், ஃபார்முலாக்களும் கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவருவதோடு உடற்பயிற்சிகளையும் தொடரும்போது, பழைய எடையை நிச்சயமாக மீட்கலாம்.
எவ்வளவு நாள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறாளோ, அந்தளவுக்கு அவள் எடை குறையும். தாய்ப்பால் புகட்டுதலை மீறிய சிறப்பான எடை குறைப்பு நடவடிக்கை வேறில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரித்துவிடும் என்ற மூடநம்பிக்கையை விழிப்பு உணர்வால் வெல்வோம்!’’
ஆம்… மம்மி ஆன பின்னும் ஸ்லிம்மியாக இருப்பது, அவள் கைகளில்தான் இருக்கிறது!
ஏன் இந்த தொப்பை?
பிரசவத்துக்குப் பிறகு, ஹார்மோன்களின் மாற்றங்களால் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் (Postpartum blues). அது, அவர்களை அதிகமாகச் சாப்பிடத் தூண்டும். அதனால் எடை அதிகரிக்கும்போது, உடம்பின் தேவைக்கும் அதிகமான கொழுப்பு… வயிறு, பின்பகுதி, தொடை என்று அவரவரின் உடலமைப்பைப் பொறுத்து உடலில் சேகரமாகும். பிரசவித்த தாய்க்கு மனஇறுக்கம் தராத சூழலை குடும்பத்தினர் உருவாக்கிக் கொடுப்பதும், அவள் தன் தேவைக்கு மட்டுமே உணவு உண்பதும் அதிக எடையையும், தொப்பையையும் தவிர்க்கச் செய்யும்.
தொப்பையைக் குறைக்க பிரசவத்துக்குப் பிறகு அணியும் பெல்ட் (Maternity Belt), அணிந்திருக்கும்வரை தொப்பையை உள்தள்ளுமே தவிர, தொப்பையைக் குறைப்பதில் அதனால் பெரிய பலன் இருக்காது.
விதிவிலக்குகள் சில!
ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண், கர்ப்பகாலத்தில் தன் எடையில் கட்டுப்பாடுகொள்ளத் தேவையில்லை. அதுவே, ஒபிஸிட்டி, `பிசிஓடி’ (Polycystic ovary disease), தைராய்டு போன்ற பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பகாலத்தில் மருத்துவப் பரிந்துரைக்குட்பட்ட எடை மட்டுமே அதிகரிக்க வேண்டும்.