குழந்தை வரம் தரும் உலகம்மை!
திருநெல்வேலியின் எல்லையிலிருக்கும் ஊரான தச்சநல்லூரில் அமைந்திருக்கிறது, உலகம்மை திருக்கோயில். பச்சை பசேலென பசுமைகட்டி நிற்கும் சூழலில் அழகான கிராம தேவதையாகக் காட்சித் தருகிறாள் ‘உலகம்மை’
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், ‘மயன்கரம்’ என்னும் இப்பகுதியை ‘மணப்படை ராஜா’ என்னும் குறுநில மன்னர் ஆண்டு வந்தார். அக்காலத்தில், ராமர் என்னும் பால் வியாபாரி, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பால் விற்பதற்காக இந்தத் திருக்கோயில் இருக்கும் பகுதியின் வழியாக தினமும் சென்று வருவது வழக்கம்.
அப்படி ஒருநாள், இந்த வழியாகச் செல்லும்போது, ஓர் இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட, பால் முழுவதும் தரையில் கொட்டி விட்டது. அடுத்தநாளும் இப்படியே நடக்கவே, சுதாரித்துக்கொண்ட அந்த வியாபாரி, மறுநாள் அந்தப் பாதை வழியாகச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் சென்றார். ஆனால், மறுநாளும் அந்தக் குறிப்பிட்ட இடம் வந்ததும் மறுபடியும் பால் முழுவதுமாக கீழேக் கொட்டியது. மிகுந்த கவனத்துடன் வந்தும் பால் கொட்டிவிடவே, பால் கொட்டிய இடத்தை உற்று நோக்கினார்.
பால்கொட்டிய இடத்தின் அருகில் இருந்த அத்திமரத்தில் இருந்து, திடீரென ஓர் அசரீரி, ‘நான் இங்கு உலகம்மையாக புதைந்துள்ளேன். எனக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டால், உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் தருகிறேன்’ என்று ஒலித்தது. பால் வியாபாரி ராமர், மன்னரின் அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் நடந்ததைத் தெரிவித்தார். அதைக் கேட்டு மெய்சிலிர்த்த ‘மணப்படை ராஜா’, தன்னுடன் தச்சர்களை அழைத்துக்கொண்டு வந்து, அந்த இடத்தில் கோயில் பணிகளைச் செய்யச் சொல்லி உத்தரவிட்டார். பிறகு நெல்லையப்பரை தரிசிக்கச் சென்றார். மறுநாள் திரும்பி வரும்போது கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த மன்னர், தச்சர்களுக்கு பரிசளிக்க எண்ணி, என்ன வேண்டும் என்று கேட்க, எங்களை கெளரவிக்கும் வகையில், இந்த ஊரின் பெயரை வைக்கவேண்டும் என்று முன்மொழிந்து உள்ளனர் தச்சர் பெருமக்கள். இதை ஏற்றுக்கொண்டு, தச்சர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தச்சநல்லூர்’ எனப் பெயர் சூட்டினார் ‘மணப்படை ராஜா’.
அன்றிலிருந்து இவ்வூர் ‘தச்சநல்லூர்’ என அழைக்கப்படுகிறது. இங்கு தச்சர்களின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் இருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம் ஆகியவை மிகுந்த கலைநயம் மிக்கவை.
ஒவ்வோர் ஆண்டும் தை மாதம், கடைசி செவ்வாய்க்கிழமை நடக்கும் ‘திருமால் பூஜை’ இங்கு பிரசித்திப் பெற்றது. தவிர, நவராத்திரி கொலு உற்ஸவம், ஆனி வருஷாபிஷேகம் ஆகியவை அம்பாள் வீதியுலாவுடன் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன.
இந்தக் கோயிலில் நிறைவேறும் பிரார்த்தனைகள் பற்றிக் கோயிலின் குருக்கள் நாகராஜனிடம் கேட்டபோது, ‘இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து 48 நாட்கள் வந்து நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி, வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்றும், திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள், இங்கு வந்து மனமார வேண்டிக்கொண்டால், குழந்தைப்பேறு கிட்டும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்’’ என்றார்.