கூகுள் ப்ளே சாதனையையும் விட்டு வைக்காத ‘பாகுபலி’
ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம், அதன் டிஜிட்டல் விநியோக தளமான ப்ளே ஸ்டோரில் அந்த வருடம் (இந்தியாவில்) அதிகம் பேரை ஈர்த்த செயலிகள், விளையாட்டு, இசை, திரைப்படம் மற்றும் புத்தகங்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
2017-க்கான பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ மொபைல் விளையாட்டு, மற்ற சர்வதேச விளையாட்டுகளை விட அதிகமுறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘WWE சாம்பியன்ஸ்’, ‘சூப்பர் மேரியோ ரன்’, ‘போக்கிமான் டூயல்’ உள்ளிட்ட விளையாட்டுகளை பாகுபலி முந்தியுள்ளது.
மேலும் கீரவாணி இசையில் உருவானே ‘சகோரே பாகுபலி’ பாடல் அதிக முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்ட பாடல்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்த இடத்தை அர்ஜித் சிங்கின் பாடல் பெற்றுள்ளது.
திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஷாரூக் கான், அலியா பட் நடித்த ‘டியர் ஜிந்தகி’ படம் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. தொடர்ந்து ‘மோனா’, ‘வொண்டர் வுமன்’ ஆகிய படங்கள் பட்டியலில் உள்ளன. இந்த மூன்று படங்களுமே வலுவான பெண் கதாபாத்திரங்கள் இருக்கும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஃபோட்டோ எடிட்டர் – பியூட்டி கேமரா & ஃபோட்டோ ஃபில்டர்’ (Photo Editor — Beauty Camera & Photo Filters) மற்றும் ‘ஃபேஸ்புக் மெஸெஞ்சர் லைட்’ ஆகிய செயலிகள் முதலிடங்களைப் பிடித்தன. புத்தகங்களைப் பொறுத்தவரை, கரண் ஜோஹர், ரிஷி கபூர், ரகுராம் ராஜன் ஆகியோரது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பேசும் புத்தகங்கள் அதிக வாசகர்களைச் சென்றடைந்துள்ளன.
சர்வதேச அளவில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ அதிக முறை பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்ற பெருமையைப் பெற்றது.