கூட்டணியா உண்டா இல்லையா? சொல்லுங்க கேப்டன். புலம்பும் தேமுதிக தொண்டர்கள்

கூட்டணியா உண்டா இல்லையா? சொல்லுங்க கேப்டன். புலம்பும் தேமுதிக தொண்டர்கள்
vijayakanth
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு நாளை அல்லது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்காமல் குழப்பத்தில் உள்ளன. இந்த குழப்பத்திற்கு 100% தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் காரணம் என கூறப்படுகிறது.

கிங் அல்லது கிங் மேக்கர், எந்த கட்சியுடன் கூட்டணி, கூட்டணி உண்டா அல்லது தனித்து போட்டியா என்று எந்த முடிவையும் கூறாமல் இழுத்தடித்து வருவது அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமின்றி வாக்காளர்களையும் அதிருப்தி அடைய செய்துள்ளது. இனி அவர் எந்த கூட்டணிக்கு சென்றாலும் அவருக்கு வாக்களிக்கும் நிலையில் மக்கள் இல்லை. இந்நிலையில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிலும் விஜயகாந்த் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவில்லாத கருத்தைத்தான் தெரிவித்தார். விஜயகாந்த் இந்த கூட்டத்தில் பேசியதாவது:

“போராட்டம் நடத்தும் மக்கள் மீது மாநில அரசு அடக்கு முறையை ஏவிவிடுகிறது. சமீபத்தில் போராட்டம் நடத்திய மாற்று திறனாளிகள் மீது போலீசை ஏவி தடியடி நடத்தியுள்ளது. காக்கி சட்டை அணிந்திருப்பவர்கள் மீது மரியாதையும், பயம் கொண்டுள்ளோம். ஆனால் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். வெள்ள நிவாரண நிதி மக்களை சென்று அடையவில்லை. ஆனால் இதை குறித்தெல்லாம் பத்திரிக்கைகள் எழுதுவது இல்லை.

நான் கூட்டணிக்காக பேரம் பேசுவதாக பத்திரிகைக்காரர்கள் கூறி வருகிறார்கள். அது பொய், நான் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை. அதேபோல் கூட்டணி அமைப்பதற்காகவும் பயப்படவில்லை. தே.மு.தி.க. குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக வரும் தகவல்கள் தவறு. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதேபோக்கில் போனால் தேர்தல் முடிந்தபிறகுதான் கேப்டன் கூட்டணியை அறிவிப்பார் போல தெரிகிறது என்று கூட்டத்திற்கு வந்த தேமுதிக தொண்டர்களே புலம்பி தீர்த்ததுதான் மிச்சம்

Leave a Reply