கேட்ட வரங்களை உடனே அருளிடும் தட்சிணாமூர்த்தி கோவில்

கேட்ட வரங்களை உடனே அருளிடும் தட்சிணாமூர்த்தி கோவில்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பையூர் கிராமத்தில் இருக்கிறது தட்சிணாமூர்த்தி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பையூர் கிராமத்தில் இருக்கிறது தட்சிணாமூர்த்தி திருக்கோவில். தமிழகத்தில் நடுநாயகமாக விளங்கும் தென்பெண்ணை நதியின் தெற்கிலும், திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர், உலகளந்த பெருமாள் ஆலயங்களின் கிழக்கிலும், சுந்தரரால் பாடல் பெற்ற திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை என வழங்கப்படும் கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கிலும் அமைந்திருக்கிறது பையூர் தட்சிணாமூர்த்தி ஆலயம்.

இந்த ஆலயத்தில் உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவரான சிவபெருமானின், ஒன்பதாவது வடிவமான குருவின் தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். மாமல்லபுரச் சிற்பக்கலை வல்லுநரால் உருவாக்கப்பட்டு, மிகப்பொலிவுடன் கூடிய 12 அடி உயரம் கொண்ட ஞானகுருவாக இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், இந்த ஆலயத்தின் கருவறை தரையில் இருந்து உச்சி கோபுர கலசம் வரை 27 அடியில் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் சிறப்பு ஆகும்.

இங்கு குரு தட்சிணாமூர்த்தி வான் நோக்கும் வகையில் உயர்ந்த தோற்றத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆலய நுழைவு வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் பெருமான் ஆதிசேஷனுடன் வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். புத்திரபேறின்மை, திருமணம் தள்ளிப்போகுதல், வேலை வாய்ப்பின்மை என பக்தர்களின் அனைத்து குறைகளையும் குரு தட்சிணாமூர்த்தி தீர்த்து வைக்கிறார். மேலும் இங்கு வரும் பக்தர்கள், குரு தட்சிணாமூர்த்திக்கு தங்கள் கையால் பால் அபிஷேகம் செய்யலாம் என்பது, பக்தர்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகின்றனர்.

தென்பெண்னை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பையூர் தட்சிணாமூர்த்தியைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆலங்குடிக்கு அடுத்து தமிழகத்தில் தென்முகக் கடவுளுக்கென தனித்திருக்கும் ஆலயமாக இது அமைந்துள்ளது. வருகின்ற 4-ந் தேதி (வியாழக்கிழமை) குருப்பெயர்ச்சி அன்று, இக்கோவிலில் சிறப்பு பூஜைகள், பால் அபிஷேகம், சங்கு, பரிகார கலச மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் குரு பகவான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.

பையூர் குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்திற்குச் செல்ல, விழுப்புரத்தில் இருந்தும், திருக்கோவிலூரில் இருந்தும் ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

Leave a Reply