கேரள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து வெளியேறும் அதிகளவிலான உபரி நீர் மற்றும் தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளதோடு வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது
இந்த நிலையில் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயமும் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சுகின்றனர். இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி திறக்கும் தேதிகளும், ரத்து செய்யப்பட்ட தேர்வின் தேதிகளும் பின்னர் அறிவிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கேரளாவில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 குழுவினர் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளனர். மேலும் 35 குழுவினர் இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.