கேரள மக்களிடம் யாரும் மோத வேண்டாம்: முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

கேரள மக்களிடம் யாரும் மோத வேண்டாம்: முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

பாஜக தொண்டர்கள் கேரளாவில் தாக்கப்பட்டால் கேரள முதல்வர் மாநிலத்தை விட்டு வெளியே வரமுடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில் “கேரள மக்களிடம் யாரும் மோத வேண்டாம்” என்று முதல்வர் பினராயி விஜயன் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கேரளா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் பாஜக கட்சியும், ஆஎஸ்எஸ் இயக்கமும் இணைத்து மக்கள் பாதுகாப்பு பேரணி என்ற நீண்ட பேரணி ஒன்றை நடத்தி வந்தனர். அந்தப் பேரணிக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. அதுமட்டும் இல்லாமல் அந்தப் பேரணியை ஆரம்பித்த பாஜக கட்சித் தலைவர் அமித் ஷா பேரணியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பாஜக தலைவர்கள் பலர் கேரளாவில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிராக பேசி வந்தனர். இந்தப் பேரணியானது கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா சட்டசபை தொகுதி வழியாகவும் நடத்தப்பட்டது. ஆனால் இந்தப் பேரணிக்குப் பின்பு நடந்த வெங்கரா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பாஜக கட்சி வேட்பாளர் ஜனசந்திரன் வெறும் 5728 வாக்குகள் பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.கேரளா வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் 65,227 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து கேரளாவில் பேரணி நடத்திய பாஜக கட்சிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தற்போது பதிலளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று பத்திரிகையாளர் சங்கம் நடத்திய ‘ஆபத்தில் ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான செமினாரில் பங்கேற்று பினராயி விஜயன் பேசுகையில் கூறியதாவது: கேராளாவில் வெறுப்பரசியலை பரப்ப நினைத்த பாஜக திட்டம் மொத்தமாக தோற்றுவிட்டது. கேரளா மக்கள் உங்களை எப்போதும் விரும்ப மாட்டார்கள். அதற்கு இந்த தேர்தல் முடிவுகளே சிறந்த உதாரணம். இனி பாஜக கட்சி கேரளாவோடு மோத வேண்டாம்” என்று கூறியுள்ளார். கேரளாவின் சுற்றுலா துறையை சீரழித்து, கேரள மக்கள் வாழ்வாதாரத்தை நசுக்கவே, கேரளா குறித்து தவறான கருத்துக்களை பாஜக பரப்பி வருவதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த பேச்சு மீண்டும் பாஜகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply