கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த தமிழ் நடிகர்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர சகோதரிகளை பார்க்கும் போது மனமுடைந்து போனதாகவும் அவர்களுடைய வாழ்வு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தான் ரூ.1 கோடி தர முடிவு செய்துள்ளதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் வரும் சனிக்கிழமை அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள முதலமைச்சர் காட்டும் பகுதியில் பணி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் லாரன்ஸ், இதுவரை உதவி செய்தவர்களுக்கும், இனிமேல் உதவி செய்யப் போகிறவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பேரழிவில் இருந்து கேரள மாநிலம் கட்டியெழுப்பப்பட ராகவேந்திர சுவாமிகளை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோலிவுட் திரையுலகில் இருந்து விஜய் ரூ.70 லட்சமும், கார்த்தி-சூர்யா இணைந்து ரூ.25 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.15 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், ரோஹினி ரூ.2 லட்சம் என வெள்ள நிவாரண நிதி இதுவரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.