கைகள் பத்திரம்… கேட்ஜெட்ஸ் அலெர்ட்!
காலை எழுந்ததும் நியூஸ் பேப்பர் படிக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. பலரும் கண் விழிப்பதே செல்போனில்தான். ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டரிலும் ஒரு வலம்வந்தால் நாட்டு நடப்புகள் விரல்நுனிக்கு வந்துவிடுகின்றன. கிளம்பி அலுவலகத்துக்கு வந்து கணிப்பொறி முன் அமர்ந்தால், மாலை வரை கம்ப்யூட்டர்தான் கதி. இடையிடையே அவ்வப்போது கிடைக்கும் நேரத்திலும் மொபைலை எடுத்து விரலால் வருடிக்கொண்டிருப்பதுதான் ரிலாக்சேஷன். இப்படி, சதா சர்வகாலமும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களோடு புழங்குவது கண்களுக்கு மட்டும் அல்ல… கைகளுக்கும் ஆபத்தானது. இதனால் செல்ஃபி எல்போ மற்றும் டென்னிஸ் எல்போ பிரச்னைகள் வரலாம். மருத்துவமொழியில் சொன்னால் லேட்டரல் எபிகாண்டிலிடிஸ் (Lateral epicondylitis). இதைத் தவிர கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலியும் சிலருக்கு ஏற்படுகின்றன. இந்த வலிகள் எவ்வாறு ஏற்படுகின்றன… இதற்கு என்ன தீர்வு என்று பார்ப்போம்!
லேட்டரல் எபிகாண்டிலிடிஸ்
இதை, `டென்னிஸ் எல்போ’ என்றும் சொல்வார்கள். டென்னிஸ், பாட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கும், தச்சர்கள், பிளம்பர்கள், பெயின்டர்கள் மற்றும் கனமான பொருட்களைத் தூக்கும், நகர்த்தும் பணியில் இருப்பவர்களுக்கும் அதிகமாக கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக, போதுமான ஓய்வும் ஸ்ட்ரெச்சிங் போன்ற தசையை நெகிழ்த்தும் பயிற்சிகளும் இன்றி, தொடர்ந்து கைகளுக்கு வேலை தருவதால், கையில் உள்ள தசைகள் பாதிப்படைகின்றன. சிலருக்கு, இந்த வலி முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை பரவும். பெருவிரல், விரல்நுனிகள், மணிக்கட்டு, முழங்கை போன்ற இடங்களிலும் சிலருக்கு வலி இருக்கும்.
அதிகமாக விரல்களின் பயன்பாடு இருக்கும்போது அல்லது பெருவிரலைப் பயன் படுத்தும்போது விரல்களை நிமிர்த்துவதற்கான தசையில் (Extensor tendon) ஏற்படும் அழுத்தத்தினால் வலி ஏற்படுகிறது.
கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி
* பயணங்களில் செல்போன் பயன்படுத்தும் போது இருக்கை நிலைகள் தவறாக இருந்தாலும், கழுத்து மற்றும் முதுகுவலி ஏற்படும். அதிர்வுகள் அதிகமாக இருக்கும்போது, வலிகள் எளிதில் ஏற்படும்.
* சிலருக்கு லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது, கை, கழுத்து, முதுகுத்தண்டு போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்.
* அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு மற்றும் கீழ் முதுகில் வலி ஏற்படும். நீண்ட நேரம் ஏ.சி-யில் அமர்ந்து இருப்பதும் வலி ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும்.
* தொடர்ந்து ஒரே மாதிரியான நிலைகளில் இருப்பவர்களுக்கு, இது போன்ற வலிகள் ஏற்படுகின்றன.
பாதிப்புகள்
தசைத் தளர்வு, தசைப் பிடிப்பு, சீரற்ற ரத்த ஓட்டம், முழங்கை மற்றும் கைகளில் வலி, கழுத்து வலி, முதுகுவலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எப்படிச் சரிசெய்வது?
* ஐஸ் பேக் அல்லது ஹாட் பேக்கை வலி ஏற்படும் இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
* கை வலியைச் சரிசெய்ய சில மசாஜ்களை நமக்கு நாமே செய்யலாம். கை விரல்களில் வலி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, மற்றொரு கையின் ஆள்காட்டி விரலை வலி உள்ள இடத்தில் வைத்து சற்று அழுத்தித் தேய்க்க வேண்டும். இதேபோல், பெருவிரல் கொண்டும் செய்ய வேண்டும்.
* மணிக்கட்டை மற்றொரு கையின் ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலால் சுற்றிப் பிடித்து சற்று அழுத்தி, தேய்த்துக் கொடுக்க வேண்டும். மேலும் வலி உள்ள இடத்தில் பெருவிரலால் அழுத்தி கையை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.
* முழங்கையில் ஏற்படும் வலியை நீக்க, கைகளை நேராக நீட்டி மணிக்கட்டை மேலும் கீழும் அசைக்க வேண்டும். இதுபோன்று, முழங்கையை மடக்கி நீட்ட வேண்டும். இதேபோல் 20-25 விநாடிகள் செய்ய வேண்டும்.
* கைகளை நேராக நீட்டி மணிக்கட்டை கீழ் நோக்கி இருக்குமாறு சில விநாடிகள் வைக்க வேண்டும். பின்பு, உள்ளங்கையை மடக்கி நேராக நீட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து, முழங்கையை மடக்கி, மீண்டும் பழையநிலைக்கு வர வேண்டும். இதேபோல், இரண்டு கைகளுக்கும் செய்ய வேண்டும்.
* ஐஎஃப்டி பிசியோதெரப்பி மற்றும் அல்ட்ராசோனிக் (Ultrasonic) எனப்படும் ஹீட்டிங் தெரப்பி மூலம் வலியைச் சரிசெய்யலாம். மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் மூலமாகவும் சரிசெய்யலாம். தொடர்ந்து வலி இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு பிரச்னை பெரிதாக இருந்தால், அறுவைசிகிச்சைக்கூட செய்ய வேண்டியது இருக்கலாம்.
தடுக்கும் வழிமுறைகள்
* எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிகம் பயன்படுத்த நேரும்போது அடிக்கடி இடைவெளிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
* தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
விரல்களில் நகங்கள் அதிக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* சரியான இடத்தில் அமர்ந்து, சரியான நிலைகளில் கணிப்பொறி, செல்போனைப் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை தொடர் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* குளிர்ச்சியைத் தவிர்த்து, கைகளை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இதற்கு மருத்துவர் பரிந்துரையுடன் கை உறைகளைப் பயன் படுத்தலாம்.
* கீபோர்டுகளை அல்லது தொடுதிரையைப் பயன்படுத்தும்போது, அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் கீபோர்டு களைப் பயன்படுத்த வேண்டும்.
* உடல் அதிர்வாக, இயக்க நிலையில் இருக்கும் போதும் பயணங்களின்போதும், கேட்ஜெட் களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் ஏ.சி யில் அதிக நேரம் இருக்கவேண்டியது இருந்தால், உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதைச் சரிசெய்ய அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி மூன்று லிட்டர் நீர் பருக வேண்டும். நீரானது தசைப் பிடிப்பையும், உடல் வறட்சியையும் சரிசெய்கிறது.