கொடுங்கையூர் சிறுமிகள் பலி எதிரொலி: 8 மின்வாரிய ஊழியர்கள் சஸ்பெண்ட்
நேற்று சென்னை கொடுங்கையூரில் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் சென்னையை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது.
இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அமைச்சர் தங்கமணி கூறியதை அடுத்து இன்று எட்டு மின்வாரிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் மூன்று பேர் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழையை கணக்கில் கொண்டு கடந்த ஜூலை மாதமே சேதமடைந்த மின் சாதனங்களை சரிசெய்ய மின்வாரிய தலைவர் சாய்குமார் உத்தரவிட்டிருந்தும் மின் பகிர்மான கழக பிரிவில் உள்ள மின் பொறியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் பராமரிப்பு பணி முழுமையாக நடைபெறவில்லை. இந்த பணிகள் முழுமையாக நடைபெறாததால் நேற்று இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். எனவே மின்வாரிய ஊழியர்கள் எட்டு பேர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மின் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். மேலும் சென்னை மின் விநியோக பெட்டிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அனைத்து மின்வாரிய பெட்டிகளையும் ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.