முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை ஆணையாளர் பீம் சயின் பாஸ்ஸி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் சுனந்தா மரணத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுடில்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய காவல்துறை ஆணையர் பீம் சயின் பாஸ்ஸி, “சுனந்தா மர்மமாக மரணம் அடைந்த வழக்கில் இதுவரை பெறப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இந்த வழக்கில் குற்றவாளி யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மட்டுமே கூறினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் சுனந்தா இறந்திருக்கலாம் என்று டில்லி காவல் துறையினர் தெரிவித்திருந்த நிலையில் அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் சசி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான சில தகவல்கள் பெரும் சர்ச்சை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் சசிதரூர் டெல்லி போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கைக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர், தன்னுடைய மனைவியின் மரணத்தில் எவ்வித சதிச் செயலும் இல்லை என்றே தாம் இதுநாள் வரை கருதிவந்துள்ளதாகக் கூறியுள்ள தரூர், விசாரணை தொடர்பாக தான் முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்று உறுதியளித்துள்ளார். காவல்துறை எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பதையும் தமக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக டெல்லி போலீஸார் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.