கொள்ளையடிக்கப்பட்ட சென்னை வங்கி செயல்படுவது எப்போது?
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ‘ஹாலிவுட்’ பட பாணியில் நேற்று லாக்கர் அறையை உடைத்து 3 லாக்கர்களில் பல நூறு சவரன் நகை, பணத்தைத் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகிறது
இந்த கொள்ளை குறித்த விசாரணையில் இந்த வங்கியின் துப்புரவு ஊழியர் சபில் லால் சந்த் என்பவர் காணாமல் போனது தெரிய வந்தது. சபீல் லால் சந்த் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் துப்புரவு ஊழியராக வங்கியிலேயே பணியாற்றியதும், வங்கியின் கீழ் தளத்தில் அவருக்காக தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் கொள்ளை போன நகை, பணம் என ரூ.32 லட்ச ரூபாய் ரொக்கம் இருக்கலாம் எனவும், நகைகள் எவ்வளவு என்பது லாக்கருக்கு சொந்தமானவர்கள் வந்து பார்த்து கூறினால் தெரியவரும் என்பதால் நூறு சவரனுக்கு குறையாமல் திருடு போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கி 24 மணி நேரத்திற்குள் மீண்டும் சேவையை தொடங்கும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் சொத்துகளை பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம் என்றும் கூறப்பட்டுள்ளது.