கோடை காலத்துக்கான உணவுப் பழக்கம்
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் உப்புச் சத்து ஆகியவை குறையும். இதனைத் தடுக்க நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும்.
இது குறித்து சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் கனகசபை கூறியதாவது:
உடலில் தண்ணீர் இருப்பை சரியான அளவில் வைத்துக் கொள்ள தினமும் 8 தம்ளர் சுத்தமான தண்ணீரை குடிக்கவேண்டும். மேலும் மோர், பழச்சாறுகள் ஆகியவற்றையும் உட்கொள்ளலாம்.
உடலில் இருந்து உப்புச்சத்து வெளியேறுவதால், சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ள இளநீரை அருந்தலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரை அதிகம் பருகாமல் இருக்கவேண்டும். இல்லையென்றால் உடலில் உப்பு அளவு அதிகரித்து விடும்.
சுகாதாரமான முறையில் விற்கப்படும் தர்பூசணி பழம், கிர்ணி பழம், திராட்சை, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். பழங்களைத் தவிர தண்ணீர் அதிகம் உள்ள காய்கறியான முள்ளங்கியையும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். தர்பூசணி பழத்தில் 93 சதவீதமும், வெள்ளரியில் 96 சதவீதமும் நீர்ச்சத்து உள்ளது. இதேபோல, திராட்சையில் 91 சதவீதம், முள்ளங்கியில் 95 சதவீத நீர்ச்சத்தும் உள்ளது. தர்பூசணியில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் உள்ளது. வெள்ளரியில் விட்டமின் ஏ, சி மற்றும் கே, பாஸ்பரஸ், மேங்கனீஸ், மேக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துகள் உள்ளன. முள்ளங்கியில் ரிபோபிளேவின், விட்டமின் பி6, கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன.
தவிர்க்க வேண்டியவை
வெயில் காலத்தில் குளிர்ச்சியான சாஃப்ட் டிரிங்க் எனப்படும் குளிர்பானங்களை அருந்துவது வழக்கம். இந்த குளிர்பானங்களில் உள்ள சில பொருள்கள் உடலில் உள்ள தண்ணீரை சிறுநீர் மூலம் அதிகளவில் வெளியேற்றிவிடும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். இதேபோல காரம் உள்ள உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். மசாலா பொருள்களான மிளகு, பட்டை, இலவங்கம் போன்ற பொருள்கள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்.
சரும பாதுகாப்புக்கு…
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் சருமத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதன் தாக்கம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் வெளியே செல்லும்போது துணியால் முகத்தை மூடிக் கொள்ளலாம் அல்லது சன் ஸ்கிரீம்களை வெளியில் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பூசிக் கொள்ளலாம்.