கோவா முதல்வர் உடல்நிலை எதிரொலி: ஆட்சியை பிடிக்க முயலும் எதிர்க்கட்சி

கோவா முதல்வர் உடல்நிலை எதிரொலி: ஆட்சியை பிடிக்க முயலும் எதிர்க்கட்சி

கோவா முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஆட்சி அமைக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் உரிமை கோரியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பாஜகவும் வென்றன. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது.

தற்போது, கோவா மாநில முதல்மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் பொறுப்புக்கு யார் வருவது என்ற உட்கட்சி பூசல் அங்கு நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவா மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னர் மாளிகையில் இன்று மனு அளித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சந்திரகாண்ட் கவ்லேகர், அமைச்சரவையை கலைக்கும் முடிவை எடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக எதிர்க்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதர கட்சிகளின் ஆதரவு தற்போது தங்களுக்கே இருப்பதாகவும், வாய்ப்பு அளித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply