கோவையில் 100க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்த பெண் காவலர்க்கு குவியும் பாராட்டுக்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையைச் சேர்ந்தவர் ஆமினா. இவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் காவல் துறைக்கு வருவதற்கு முன்பு பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். அப்போது குழந்தைகளின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் கண்ட இவருக்கு, இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது.

இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆமினா காவல்துறையில் சேர்ந்தார் கோவை புதூரில் உள்ள நான்காவது சிறப்பு பட்டாலியன் பிரிவில் பணியாற்றிய பிறகு கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இங்கு அரசு மருத்துவமனையில் உயிரிழக்கும் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி வழங்கப்பட்டது. அதில் சில ஆதரவற்றோரின் அடையாளம் தெரியாத உடல்களும் வரும் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியாது. .

உறவினர்கள் யாரும் வராததால் சவக்கிடங்கில் அந்த உடல் கேட்பாரற்று மூன்று நாட்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். அந்த உடலுக்கு நாங்கள்தான் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு அடக்கம் செய்ய யாரும் முன் வர மாட்டார்கள். அவ்வாறான நேரங்களில் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஆமினா அந்த உடல்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அனைத்து சடங்குகளையும் செய்து தானே அடக்கம் செய்ய தொடங்கினார்.

இவ்வாறு கோவை ஆத்து பாலத்தில் உள்ள மயானத்தில் 50 உடல்கள் மேட்டுப்பாளையம் எஸ் எம் நகரில் உள்ள நந்தவனத்தில் 50க்கும் மேற்பட்ட உடல்கள் என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கு மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறார். பெண் காவலர் ஆமினா தனது காவல்துறை பணியுடன் சேர்த்து தன்னலமற்ற சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். சிறு வயது முதலே அவருக்கு உதவும் மனப்பான்மை இருந்ததால் தற்போது ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிப்பதாகவும், இன்னும் அதிகமாக பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையும் ஏற்பட்டு வருவதாக கூறும் பெண் காவவர் ஆமினா தனது பணியை ஆரவாரம் இல்லாமல் மிகவும் அமைதியாக செய்து வருவதாகவும் கூறுகிறார்