சக்தி தரிசனம் – கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு!
இரணியன் தன் மடியில் கிடத்தி, வதம் செய்யும் திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை, `தட்சிண அஹோபிலம்’ என்று போற்றுவர்.
வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன், அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும்
காட்சி தருகின்றனர்.
சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு, சிறப்புத் திருமஞ்சனத்தோடு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநரசிம்மரைச் சாந்தப்படுத்த, பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். பானகமும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபட்டால், இழுபறியான வழக்குகள், திருமணத் தடை, நோய், பில்லி சூனியம் போன்ற தீவினைகள் ஆகிய அனைத்துக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்குமாம். ஆலயத்தின் அருகிலேயே உள்ள நரசிம்ம தீர்த்தமும் மகத்துவம் வாய்ந்தது!
வழிபடுவது எப்படி?
பதினாறு கரங்களுடன் கூடிய கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிறந்த வரப்பிரசாதி. செவ்வாய்க்கிழமைகளில் இந்த ஸ்வாமியைத் தரிசிப்பதுடன், நீராஞ்சன தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது விசேஷம். அதாவது, தாம்பூலத் தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் நெய் நிரப்பி, தீபம் ஏற்றி வைத்து, 16 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் நீங்கும்.
சுவாதி, செவ்வாய்க்கிழமைகள் மட்டுமின்றி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள், நரசிம்ம ஜயந்தி, பிரதோஷ தினம் ஆகிய நாள்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
எப்படிச் செல்வது?
திருநெல்வேலி – தென்காசி சாலையில், சுமார் 37 கி.மீ தொலைவில் உள்ள ஊர் பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கீழப்பாவூர்.