சங்கடம் தீர்க்கும் சனி பிரதோஷம்

சங்கடம் தீர்க்கும் சனி பிரதோஷம்

3அழியா வரம் வேண்டி அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் உருவானது. அந்த விஷம் உலகை அழித்துவிடாதபடி, அதை ஒன்றுதிரட்டி அருந்தி விட்டார் சிவபெருமான். அதைக்கண்டு பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழுத்திலேயே தங்கும்படி செய்தாள். இதையொட்டியே சிவனாருக்கு திருநீலகண்டன் என்றும் திருப்பெயர் உண்டு.

விஷம் அருந்திய சிவப்பரம்பொருளின் அருளாடல் தொடர்ந்தது. அதீத களைப்பு மேலிட்டதுபோல் அப்படியே படுத்துவிட்டார் சிவனார். இதனால் ஆதிசக்தி முதலாக அண்டபகிரண்டமும் கலக்கம் அடைந்தது. விரைவிலேயே அவர்கள் கலக்கம் நீங்கும் வகையில் கண்விழித்த சிவனார், ஆனந்த தாண்டவம் புரிந்தார். அப்படி, அவர் ஆனந்தத்துடன் திருநடனம் புரிந்தது பிரதோஷ காலம்.

பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில்; களைப்புற்றவராக அவர் பள்ளிகொண்டது துவாதசித் திருநாளில். உலக உயிர்கள் மேன்மையுறும்பொருட்டு அவர் சந்தியா தாண்டவம் ஆடியது… திரயோதசி புண்ணிய தினத்தில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலத்தில்!

புனிதமான இந்தக் காலத்தையே பிரதோஷ வேளையாகக் கருதி, சிவபூஜை செய்து வழிபடுகிறோம். தொடர்ந்து 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள், சாரூப பதவி பெற்று சிவ கணங்களாகத் திகழ்வர் என்கின்றன புராணங்கள்! அதிலும் சனிக்கிழமையுடன் இணைந்து வரும் சனி பிரதோஷம் மிகச் சிறப்பானது. சிவபெருமான் விஷம் அருந்தி சயனித்து எழுந்து, ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை நிகழ்த்தினார் என்பதால், சனிக் கிழமை வரும் பிரதோஷம் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.

உஜ்ஜயினியில் நிகழ்ந்த ஒரு திருக்கதையைப் படித்தால், சனிப் பிரதோஷத்தின் மகத்துவம் இன்னும் தெளிவாக விளங்கும்.

சனிப் பிரதோஷத்தை மெச்சிய ஆஞ்சநேயர்

உஜ்ஜயினி நாட்டின் அரசர் சந்திரசேனன்; உஜ்ஜயினி ஈஸ்வரனான வீரமாஹாளர் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருமுறை இவரது அரண்மனைக்கு வந்த மாணிபத்திரர் என்ற சிவகணநாதர், மன்னனுக்கு உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை பரிசளித்தார்.

அந்த ரத்தினம் மிகவும் மகத்துவமானது. அதன் உன்னதத்தை அறிந்த அண்டை நாட்டு வேந்தர்கள், ரத்தினத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் போர் மூளும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது இந்த அறைகூவலை சந்திரசேனன் கண்டுகொள்ளவே இல்லை.

அதனால் கோபம் கொண்ட அந்த மன்னர்கள் பெரும்படையுடன் வந்து உஜ்ஜயினியை முற்றுகையிட்டனர். எந்த நேரமும் போர் மூளும் அபாயம்.

ஆனால், உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார். அரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன். உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.

மறுநாள் பொழுது விடிந்தது. சிவபூஜையை ஆரம்பித்தான். கருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான். ‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலையும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்துக் கொண்டான். அவற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் தியானத்திலும் ஆழ்ந்தான்.

நேரம் இரவு ஆனது. அவனின் தாயார் சாப்பிட அழைத்தாள். தியானத்தில் இருந்தவன், அவள் மீண்டும் மீண்டும் குரல்கொடுத்தும் பதிலே சொல்லவில்லை. ஆதலால், கோபத்துடன் வெளியே வந்தாள். அவனை நன்கு அடித்ததுடன், சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.

அவள் மகனோ… ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான். இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மாவால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான். சிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள்.

தகவல் அரசருக்கும் எட்டியது. அரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். அங்கே எழுந்தருளி இருந்த இறைவனை வலம் வந்து வணங்கினார். யாதவச் சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள்.

ஊருக்குள் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்டு பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள். ஒற்றர்களை அனுப்பி காரணத்தை தெரிந்து கொண்டவர்கள், சிவனருளை அறிந்து சிலிர்த்தார்கள். படைகளைத் திருப்பி அனுப்பி விட்டு, ஊருக்குள் வந்து சந்திரசேனனிடம் மன்னிப்பு வேண்டியதுடன், யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத் தையும் தரிசித்து மகிழ்ந்தார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார். அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.

யாதவச் சிறுவனை நெஞ்சோடு தழுவி அணைத்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே! அனைவரும் கேளுங்கள்! ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவபெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையும் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.

இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்கள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.

சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், விரதம் இருந்து பூஜிப்ப வர்கள் அடையும் பலனை அளவிட முடியுமா?

சனிப் பிரதோஷத்தின் சிறப்பை அறிந்தோம். இனி பிரதோஷ தினத்தில் நந்தியெம்பெருமானை வழிபடுவது பற்றி அறிவோம்.

நந்தி தரிசனம்!

பிரதோஷ வேளையில் நந்திக் குத் தனிச் சிறப்பு உண்டு. இந்த வேளையில், மூல வரை நந்தியம் பெருமானின் கொம்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் வழியே தரிசித்து வணங்கவேண்டும்.

சிவபெருமான் விஷம் உண்டு சயனித்துத் திருவிளையாடல் புரிந்த பிறகு எழுந்து, அம்பிகை தரிசிக்கும்படி சந்தியா நிருத்தம் ஆட, அதைக்கண்ட நந்திதேவர், ஆனந்த நிலையால் உடல் பருத்தார். அதனால், கயிலாயமே மறைக்கப்பெற்றது. நந்தியின் கொம்புகளுக்கு இடையே இருந்த இடைவெளியில், ஈசனின் நடனத்தைத் தேவர்கள் கண்டுகளித்தார்களாம். இதையொட்டியே, பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பெருமானைத் தரிசிக்கிறோம்.

இந்த வேளையில், அறுகம்புல்லை மாலையாகக் கட்டி நந்திக்குச் சாற்றவேண்டும். வில்வம், மருக்கொழுந்து, மல்லிகை ஆகிய மலர்களாலும் அலங்காரம் செய்வார்கள்

நந்திக்குக் காப்பரிசி எதற்கு?

தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ‘‘பயப்படாதீர்கள்!’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!’’ என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).

ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார். அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ‘‘ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?’’ என எகத்தாளமாகப் பேசினார்.

உடனே சிவபெருமான், ‘‘நந்தி! இங்கு வா!’’ என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ‘‘இதை முகர்ந்து பார்!’’ என்றார். நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார். உலகின் அனைத்து ஜீவராசி களுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ‘‘ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்… மன்னித்து விடுங்கள்!’’ என வேண்டினாள்.

‘‘உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!’’ என்றார் சிவபெருமான். அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார். அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

முந்தி வரம் தரும் நந்தி தரிசனம் என்பார்கள். ‘நந்தியின் நாமம் நமசிவாயவே’ எனப் பாடிப்பரவி யுள்ளார் திருஞானசம்பந்த பெருமான். நந்தி என்பதற்கு வளர்வது என்று பொருள். ஞானத்தி லும், குணத்திலும் உயர்ந்தவர்களை நந்திகள் என்றழைப்பது உண்டு. நம் வாழ்வு செழிக்க, ஞானம் வளர இறைவனின் திருவருள் தேவை. நந்தி தரிசனம் அதற்கு உதவும். இந்த நவம்பர் மாதத்தில் 12 மற்றும் 26 ஆகிய தினங்கள் சனி பிரதோஷமாக வருவது நாம் செய்த பாக்கியம். இந்த தினங்களில் உரிய நேரத்தில் சிவாலயம் சென்று வணங்குவதுடன், நம் வாழ்வு செழிக்க நந்தியையும் வணங்கி, அவர் மூலம் சிவனாரிடத்து வரம்பெற்று மகிழ்வோம். நந்தியின் நல்லருளை பூரணமாகப் பெற்று மகிழ ஏதுவாக, நந்தியெம் பெருமான் குறித்த சிறப்பு தகவல்களையும் தலங்களையும் தெரிந்து கொள்வோமா?

* திருவையாறு புராணம் திருமழப்பாடியில் சிலாதல முனிவருக்கு மகனாகத் தோன்றிய சைலாதி என்பவரே, தனது ஒப்பற்ற தவத்தால் நந்தியாகும் பேறு பெற்றார் என்கிறது.

* திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாண விழா சிறப்பு மிக்கதாகும். நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் ஆகும் என்பது சொல்வழக்கு. இதற்கேற்ப நந்தி கல்யாணத்தைத் தரிசிக்க இந்தத் தலத்தில் பெரும் கூட்டம் கூடும்.

* நந்தி திருமணம் முடிந்து சுமார் ஒருமாத காலத்துக்குப் பிறகு, முனிவர்களின் ஆசியைப் பெறுவதற்காக சுற்றிலும் உள்ள ஆசிரமங்களுக்கு மணமக்களை ஐயாறப்பர் அழைத்துச் செல்வார். அவை: திருவையாறில் சிலாதர் ஆசிரமம், திருப்பழனத்தில் கவுசிகர் ஆசிரமம், திருச்சோற்றுத் துறையில் கவுதமர் ஆசிரமம், திருவேதிக் குடியில் வியாசராசிரமம், திருக்கண்டியூரில் சதாதய ராச்சிரமம், திருப்பூந்துருத்தியில் காசியபராசிரமம், திருநெய்த்தானத்தில் பிருகு முனிவராசிரமம் ஆகியன.

* தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் நந்திதேவரின் வரலாற்றை விவரிக்கும் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை சோழர்காலத்து கலைப்பணியாகும்.

* மயிலாடுதுறையில் அருள்மிகு மயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் குடைவரையில் திருமணக் கோலத்துடன் அருளும் அதிகார நந்தி தேவரைக் காணலாம்.

* திருக்கழுக்குன்றம், மயிலை ஆகிய தலங்களில் வெள்ளியாலான அதிகார நந்தி வாகனங்கள் உண்டு. திருக்கழுக்குன்றத்தில், சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் காலையில் வேதகிரீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வலம் வருகிறார்.

* திருவையாறு புராணத்தில் நந்திதேவர் சிவனாரை வேண்டி குரங்கு முகம் பெற்றதாக தகவல் உண்டு. காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் குரங்கு முகத்துடன் கூடியவராக அதிகார நந்தியை அமைத்து வழிபடுகின்றனர்.

* நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் தில்லை. திருவலம் தலமும் நந்தி விலகி அமர்ந்த தலமாகும். திருவைகாவூரில் நந்தியெம்பெருமான் திரு முகத்தை சற்றே திருப்பிவைத்திருப்பார்.

* கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் சென்றால், அங்குள்ள பசவன்குடி நந்தி கோயிலுக்குச் செல்லாமல் வரக்கூடாது என்பார்கள். ‘பஸவ’ என்ற கன்னட சொல்லுக்கு ‘நந்தி’ என்று பொருள். ஆமாம், இந்தத் தலத்தின் சிறப்பம்சம் நந்திதான். சுமார் 16 அடி உயரம், 21 அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார் இங்குள்ள நந்தியெம்பெருமான்.

இன்றைக்கும் இந்த நந்தியெம்பெருமானுக்காக இப்பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, வருடம் தோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்களன்று நிலக்கடலைத் திருவிழா நடத்துகிறார்கள். இதனால் நிலக்கடலை அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள நந்தி பகவான், ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரரை தரிசிக்கும் நிலையில், இமயமலை இருக்கும் வடதிசை நோக்கி காட்சி தருவது சிறப்பம்சம். நந்தியின் வலக் காலின் அடியில் தபேலா போன்ற ஓர் இசைக் கருவி இருக்கிறது. அதன் அடியில் ஒரு தாமரைப்பூ. அதன் அடியில் தான் ‘ரிஷபா நதி’ என்றொரு நதி உற்பத்தியாகி காசி- கங்கையில் சங்கமமாவதாக ஐதீகம்.

நெல்லை- தூத்துக்குடி சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக் கோயிலில் குதிரை முகத்துடன் திகழும் நந்தியைத் தரிசிக்கலாம்.

* பிரமாண்டத்தில் நம்மை மலைக்கவைப்பவர் தஞ்சை நந்தியெம் பெருமான். ராஜராஜன் வைத்த நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட…, பின்னர் வந்த நாயக்கர்கள் நந்தி அமைத்து, மண்டபம் எழுப்பினர்.

Leave a Reply