சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள சத்தீஷ்கர் அதிரடிப்படையினர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை சுற்றி வளைக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா என்ற மாவட்த்தில் இந்த கடுமையான தாக்குதல் நிகழ்ந்துள்ளது. டோங்காபால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் சத்தீஷ்கர் மாநில போலீஸார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, இந்த அதிரடி தாக்குதலை மாவோயிஸ்ட்டுகள் நிகழ்த்தியுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன் சத்தீஷ்கர் அரசு இரண்டு ஹெலிகாப்டரில் சிறப்பு அதிரடிப்படையினர்களை அனுப்பி வைத்தது. கடந்த 2010ம் ஆண்டு 76 போலீஸார் கொல்லப்பட்ட இடத்தில் தான் தற்போதும் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு சத்தீஷ்கர் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.