சபரிமலைக் கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி கோரும் பொதுநல மனுவை திரும்பப் பெற முடியாது: உச்ச நீதிமன்றம்

sabarimala_bigசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி கோரி செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுநல மனுவை திரும்ப பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதாவது இந்த வழக்கைத் தாக்கல் செய்தது முதல் தனக்கு 500 தொலைபேசி மிரட்டல்கள் வந்ததாகக் கூறி பொது நல மனுவை தொடுத்த அமைப்பின் தலைவர் நவுஷத் அகமது பொதுநல மனுவை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.

இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் கூறும்போது, ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு, அது விசாரணைக்கும் ஏற்கப்பட்டுள்ள நிலையில் அதைத் திரும்பப் பெற முடியாது, மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, தேவைப்பட்டால் ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவார். பெண்களுக்கு உரித்தான உரிமை குறித்த வழக்கை விசாரணைக் கட்டத்தில் திரும்பப் பெற வழியில்லை, அது முடியாதா காரியம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

முன் நிகழ்வுகள்:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடியுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கபடுகின்றனர்.

கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பருவம் அடைவதற்கு முன், 10 வயது வரையிலும், மாதவிடாய் நின்றபின் 50 வயதுக்கு மேற்பட்டும் பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க கோரி இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மற்றும் ரமணா ஆகியோர், “”பெண்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை தடுக்கிறீர்கள்? இதன் தர்க்கம் என்ன?” என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

தேவஸ்தான வாரியம் தடையை ஆதரித்து கடந்த அரைநூற்றாண்டுகளாக பெண்களை அனுமதிப்பதில்லை என்ற வழக்கம் இருந்து வருகிறது. என்று கூற அதற்கு நீதிபதி மிஸ்ரா, 1,500 ஆண்டுக்கு முன்பாக சபரிமலை கருவறையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? என்று மறு கேள்வி எழுப்பினார்.

மேலும், “மத அடிப்படையில் மட்டுமே பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க முடியும். மற்றபடி அனைவரும் கோயிலுக்கு செல்வதற்கு அரசமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. எனினும், பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை அரசு விளக்க வேண்டும். தவிர கடந்த 1,500 ஆண்டுகளாக சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறதா என்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக பொதுநல மனுவை திரும்ப பெற வைக்கப்பட்ட கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

Leave a Reply