சபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள், சபரிமலை கோயில் விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கின்றன; ஆதலால் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதுவரை கேரள அரசு செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தின.
ஆனால் முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டதால் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை கேரள அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் முடிவில் பினராயி விஜயன் உறுதியாக இருந்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பாஜகவும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. எனவே சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம், எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது.