சம்பளம் வாங்கியது செய்ய வேண்டியது என்ன?

சம்பளம் வாங்கியது செய்ய வேண்டியது என்ன?

moneyசொந்தமாகத் தொழில் செய்பவர்களை விட, மாதச் சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம். மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ஏதாவது அவசரத் தேவை ஏற்பட்டால், கடன் வாங்க வேண்டிய நிலையில்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். தற்போது விலைவாசியும் உயர்ந்து வருகிறது. இதைத் தவிர்ப்பதற்கு ஒரு சின்ன திட்டமிடல் இருந்தாலே போதும்.

அதாவது ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், அந்த பணத்தில் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்…

பட்ஜெட் அவசியம்!

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே அந்த மாதம் என்னென்ன செலவுகள் உள்ளன என்பதைப் பட்டியலிட வேண்டும். அந்தப் பட்டியலில் அவசியமாக செய்ய வேண்டிய செலவுகள், கொஞ்சம் காலதாமாதமாகச் செய்ய வேண்டிய செலவுகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படி பட்டியலிடும்போதே தேவையில்லாத செலவு எது என்று எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

பட்ஜெட் போட்ட பிறகு எக்காரணத்தைக் கொண்டும் செலவுகளை அதிகரிக்கக் கூடாது. அதாவது, இந்த மாதம் ஷாப்பிங் போகக் கூடாது என்று முடிவு செய்தால் அதை அப்படியே கடைபிடிப்பது நல்லது.

சேமிப்பு!

சம்பளம் வந்ததும், ஏதாவது இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருந்தால் அதை சம்பளத்திலிருந்து கழித்துவிட்டு மீதமுள்ள தொகையில் மற்ற செலவுகளைத் திட்டமிட வேண்டும். மீதமுள்ள தொகையில் அதிகபட்சம் 20 சதவிகிதம் தொகையை சேமிப்புக்குத் திட்டமிட வேண்டும். கடன், சேமிப்பு போக மீதமுள்ள தொகையில் செலவுகளை செய்ய பழக வேண்டும். இ.எம்.ஐ இல்லாதவர்கள் வீட்டு வாடகை, வேறு ஏதாவது கடன் போக 60-70 சதவிகிதம் சேமிக்க வேண்டும்.

செலவு!

சம்பளத்தில் 30 சதவிகிதம் தொகையை மட்டுமே உங்களின் செலவுத் தொகையாக வைத்துக் கொண்டு, பட்ஜெட்டில் திட்டமிட்டுள்ள செலவுகளை கவனமாக செய்வது அவசியம். அதாவது பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள செலவுகளில் எதை முதலில் செய்ய வேண்டுமென பார்த்து, அதை முதலில் வாங்கிவிட வேண்டும். அதன் பிறகு மற்ற செலவுகளை செய்யலாம்.

பிற செலவுகள்!

சம்பளம் வந்தவுடன் அடுத்து செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை, அவசரத் தேவைக்காக குறிப்பிட்ட தொகையை தனியாக எடுத்து வைப்பது. அதாவது அவசரத் தேவைகளை சமாளிப்பதற்காக குறைந்தபட்சம் 500 ரூபாயையாவது ஆர்.டி போட்டு வைப்பது உதவியாக இருக்கும்.

அதேபோல வருடத்துக்கு ஒருமுறை வரும் செலவுகளுக்கு முன்கூட்டியே பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது. குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், சுற்றுலா செல்வதற்கு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், வேறு ஏதாவது சந்தா செலுத்த வேண்டியிருந்தால் அவற்றுக்கெல்லாம் தனியாக ஒதுக்க வேண்டும். அதாவது பள்ளிக்கட்டணம் ரூ.50 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். இந்த தொகை மொத்தத்தையும் ஒரே மாதத்தில் ஏற்பாடு செய்ய முடியாது. எனவே, ஒவ்வொரு மாதமும் ரூ.4-5 ஆயிரம் என சேமித்து வைத்தாலே போதும்.

இளைஞர்கள்!

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு மேற்கூறிய செலவுகள் கொஞ்சம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களால் அதிகமாக சேமிக்க முடியும். திருமணம் ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளத்தில் அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை சேமித்து வைப்பதற்கு பழக வேண்டும். மேலும் வீட்டுக்கு பணம் தரவேண்டிய தேவையில்லாதவர்கள் சம்பளத்தில் 80 சதவிகிதம் வரை சேமிக்கலாம். ஏனெனில், அடுத்த சில வருடங்களில் எப்படியும் திருமணம் அல்லது வேறு செலவுகள் கட்டாயம் வரும். அந்த சமயத்தில் இந்த பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக கடன் வாங்குவதை தவிர்க்க முடியும். இப்போதுதானே சம்பாதிக்க ஆரம்பித்துள்ளோம், சேமிப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைக்க கூடாது.

இப்படி சம்பளம் வந்தவுடன் ஷாப்பிங் செய்வதற்கு போகாமல், கொஞ்சம் நிதானமாக யோசித்து மேற்கூறியவற்றை செய்தாலே மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply