சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை… கூடாதவை!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை… கூடாதவை!

1இனிப்பு மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானியங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது இவைதான் சர்க்கரைநோய் வருவதற்கு இன்றைக்கு முக்கிய காரணங்கள்.

சர்க்கரை நோயாளிகள் எதைச் சாப்பிடுவது நல்லது, எதைத் தவிர்க்கலாம்… தெரிந்துகொள்வோமா?

சர்க்கரைநோய்க்கு அரிசி எதிரி என்பது உண்மையல்ல. இயற்கையான முறையில் விளைந்த பாரம்பர்ய கைக்குத்தல் அரிசி ரகங்கள் பெரும்பாலும் லோ கிளைசமிக் தன்மை உடையவை. வேகமாக ரத்தத்தில் சர்க்கரையைச் சேர்க்காதவை. கூடுதலாகக் கிடைக்கும் நார்ப் பொருளும், தவிட்டில் உள்ள `ஒரைசினால்’ எனும் ஆன்டிஆக்சிடன்ட்களும் சர்க்கரைநோய்க்கு நல்ல பயன் தருபவை. விஷயம் நாம் சாப்பிடும் அளவில்தான் இருக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல், ஏசி காரில் போய், நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அரிசி சோற்றின் அளவு குறைவாக இருப்பதுதான் நல்லது.

* இன்றைக்குப் பெரும்பாலும் அரிசியும் கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியிடங்களில் அரிசி உணவுதான் கிடைக்கிறது என்றால், அத்துடன் கீரை, காய்கறிகளைச் சேர்த்து, நன்கு பிசைந்து, மெதுவாக மென்று சாப்பிடுங்கள். சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை கீரையின் நார்கள் மெதுவாக ஆக்கிவிடும்.

* தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, உருளைக்கிழங்கை! கேரட்டும் பீட்ரூட்டும் வேண்டவே வேண்டாம்.

* கோவைக்காய், கத்திரிக்காய், அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா… இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடியவை. பாகற்காயும் வெந்தயமும் சர்க்கரைநோய் கட்டுப்பட உதவுபவை.

* நாருள்ள, இனிப்பு குறைவாகவும் துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். மாம்பழம், சப்போட்டா, மோரீஸ் வாழைப்பழம்… இன்னும் ஹைபிரிட் வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரைப்படி, பிற உணவு இல்லாதபோது மாலை வேளைகளில் சாப்பிடலாம்.

* தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்புச் சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் உள்ள கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது.

* பால், இனிப்பு சேர்க்காத கிரீன் டீ அருந்துவதுதான் நல்லது. பாலுக்கு பதில் மோர் சாப்பிடலாம்.

* காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீரை அருந்தலாம். வெட்டி வேர் போட்ட பானை நீரும், சீரகத் தண்ணீரும் தினசரி உபயோகத்துக்கு நல்லது.

* மதிய உணவுக்கு… வாரத்துக்கு இரண்டு நாள் அரிசி சோறு, இரண்டு நாள் தினை அரிசி சோறு, இரண்டு நாள் வரகரிசி சோறு, ஒரு நாள் மாப்பிள்ளை சம்பா அவலில் செய்த உணவு நல்லது.

* இரவு உணவு… தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப் பயறு கூட்டுடன் சாப்பிடலாம்.

* காலை உணவு.. `பஜ்ரா ரொட்டி’ எனப்படும் கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என அளவாகச் சாப்பிடலாம். காலை உணவாக நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறுதானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை. கஞ்சியாக செய்து குடிக்க வேண்டாம். கஞ்சி என்றால் சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகம் அதிகமாகிவிடும். அதை மட்டும் தவிர்க்கவும்.

Leave a Reply