சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்… நாவல் பழம்!
நாவல்… ஆற்றங்கரை, குளக்கரை மற்றும் சாலையோரங்களில் தானாக வளரும் ஒரு மரம். இதற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்ற வேறு பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் ஜம்பலம், பிளாக்பிளம் என்பார்கள். இதன் முழுத்தாவரமும் துவர்ப்புச்சுவை, குளிர்ச்சித்தன்மை கொண்டது.
நாவல் மரம்
நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துகள் இதில் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன் உடலை உறுதியாக்கும். இதன் இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நாவல் மரத்தில் அதன் பழம் நிறைந்த சக்தி கொண்டது. இதில் வெள்ளை நாவல் என்ற ஒருவகை மரம் சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது. மேலும் ரத்த சிவப்பு அணுக்களை பெருகச்செய்வதுடன் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். இன்னொரு வகையான ஜம்பு நாவல் வாத நோய் மற்றும் தாகத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது.
நாவல் பழம்
பழங்கள் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும். இதில் உள்ள ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கக் கூடியது. இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இதில் உள்ள குயுமின் என்ற ஆல்கலாய்டு தோலில் சுருக்கம் விழுவதைத் தடுக்கும். இதன்மூலம் வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். கர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை விலகும். குழந்தை
நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாறு 3 டீஸ்பூன், சர்க்கரை 3 டீஸ்பூன் சேர்த்து இரண்டு நாள்கள் காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு போன்றவை சரியாகும்.
நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும். அத்துடன் பசியைத் தூண்டுவதோடு நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யக்கூடியது.
பழம் மட்டுமல்லாமல் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை – மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும். வேப்பம்பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல்கொட்டை பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் பொடியுடன் நாவல் விதை சம அளவு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் சர்க்கரை நோய் குறையும். விதைச்சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.
இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டு வந்தால் பேதி கட்டுக்குள் வரும். இதன் பட்டையை அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கால் லிட்டராக ஆனதும் பொறுக்கும் சூட்டில் வாய் கொப்புளித்து வந்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு தொண்டை அழற்சி சரியாகும்.
நாவல் மர வேர் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும். இதன் வேரை டம்ளராக வடிவமைத்திருக்கிறார்கள். அதில் இரவில் நீர் ஊற்றி காலையில் அந்த நீரை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.