சர்ப்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்!
தன் கணவரான சிவபெருமானை மதியாமல், தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்று, தட்சனால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயணி, பிராணத் தியாகம் செய்தாள். இதையறிந்த சிவனார், தம் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, தட்சனின் யாகத்தை அழித்தார். பிறகு தேவியின் திருமேனியைச் சுமந்தபடி உன்மத்த நடனம் ஆடினார். அப்போது தேவியின் திருமேனி அங்கங்கள் பூமியில் பல பாகங்களில் விழுந்து சிதறின. அந்த இடங்களே சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன.
பின்னர் பூமிக்கு வந்து யோகம் மேற்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட ஈசன், தாம் யோகம் செய்வதற்கு ஏற்ற இடத்தைப் பூமியில் தேர்வு செய்வதற்காக, தம் கழுத்தில் இருந்த நாகத்தை அனுப்பினார். நாகம் அடையாளம் காட்டிய ஐந்து இடங்களில் முதலாவது தலம் காளஹஸ்தி. இரண்டாவது தலம் காட்டாங் குளத்தூர். மற்றவை திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய தலங்கள் என்கின்றன ஞானநூல்கள்.
நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றான காட்டாங் குளத்தூரில் ஐயன் காளத்தீஸ்வரர் என்னும் திருப்பெயருடனும், அம்பிகை ஞானாம்பிகையாகவும் அருளும் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக, பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. தெற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஐயன் கிழக்கு நோக்கி அருள்கிறார். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்பு வாகத் தோன்றியதாகவும், மகரிஷி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு அருளும் ஈசன் சுயம்பு மூர்த்தம் என்பதாலும், அதிக சக்தி கொண்டவர் என்பதாலும், இந்தப் பெருமானை நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், சுவரில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகத் தரிசித்து வழிபடுகிறார். இந்த நந்திதேவர் `ஆபரண நந்தி’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறார். நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிபட்டுத் திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் ராகுவும் கேதுவும் ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் நவகிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.
தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீஞானாம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.ஆலயத்தை வலம் வரும்போது, வலம்புரி விநாயகர், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம். பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்கள் விசேஷமாகக் கொண்டாடப் படுகின்றன. சித்ரா பௌர்ணமி நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ராகு – கேது, குரு, சனிப் பெயர்ச்சிகளின்போது சிறப்புப் பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி – பொத்தேரிக்கு அடுத்துள்ளது காட்டாங்குளத்தூர். இங்குள்ள ரயில் அல்லது பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் போதும். நடந்து செல்லும் தொலைவிலேயே அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் ஆலயம். இங்கு, சனிக்கிழமைதோறும் நிகழும் சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால் சர்ப்பதோஷங்கள் நீங்கும். அதேபோல் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜை வைபவத்தைத் தரிசிக்க, குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.
கலைநயம் மிளிரும் பதினாறு கால் மண்டபம்
இந்த ஆலயத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் பல்லவர்களுக்கே உரித்தான அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், தில்லை காளி, காஞ்சி காமாட்சி, கருடன் மீது அமர்ந்திருக்கும் பெருமாள் ஆகிய தூண் சிற்பங்களை மிக அற்புதமாக வடித்திருக்கிறார்கள்.
இந்த மண்டபத்தின் இடப்புறம் கால பகவான், சூரிய பகவான், சனீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர் ஆகியோர் இருக்கிறார்கள். மண்டபத்தின் வலப்புறம் தேவியரோடு அருள்கிறார் சுப்ரமணியர். பொதுவாக முருகப் பெருமானின் வலப்புறம் நோக்கி இருக்கும் மயில், இந்த ஆலயத்தில் இடப்பக்கம் திரும்பி நிற்பது விசேஷ அம்சம் என்கிறார்கள்!