சர்ப்ப தோஷங்கள் நீங்கும்… சந்தோஷம் பெருகும்!
‘வேலுண்டு வினையில்லை’ என்பார்கள் பெரியோர்கள். அப்படி வேலவனால், அவன் தந்த வேலாயுதத்தால் பக்தர் ஒருவர் காப்பாற்றப்பட்டதற்கு சாட்சியாய் திகழ்கிறது முருகன் திருத்தலம் ஒன்று. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, தீர்த்தத்தொட்டி எனும் பேருந்து நிறுத்தம். இதன் அருகிலேயே- கொட்டக்குடி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ‘விருப்பாட்சி’ ஆறுமுக நயினார் கோயில்.
அது என்ன ‘விருப்பாட்சி’ எனும் அடைமொழி?!
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் பழநிக்கு பாத யாத்திரை சென்றார். அவர் பழநி தரிசனம் முடிந்து திரும்புகையில், விருப்பாட்சி எனும் இடத்தில் கலவரம் மூண்டிருப்பதாக வழியில் எதிர்ப்பட்ட பயணிகள் மூலம் அறிந்தார். அதனால் தனது ஊருக்குச் செல்ல முடியாதோ என்று கலங்கினார். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் வேல் ஒன்றை அவரிடம் கொடுத்து, ‘இதன் துணையுடன் ஊருக்குப் போ. உனக்கு எவ்வித தீங்கும் நேராது’ என்று கூறிச் சென்றான். சிறுவனாக வந்து வேல் கொடுத்தது சாட்சாத் அந்த முருகப்பெரு மானே என்று கருதிய பக்தரும், வேலாயுதத்தையே துணையாகக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். எந்தவித ஆபத்துமின்றி, இந்தத் தலத்தை அடைந்தார். இங்கேயிருந்த தீர்த்தத்தில் நீராட விரும்பியவர், வேலாயுதத்தை கோயிலில் வைத்துவிட்டு தீர்த்த நீராடி முருகப்பெருமானைத் தரிசித்து அருள்பெற்றார்.
விருப்பாட்சி எனும் ஊரில் ஏற்பட்ட கலகத் துயரில் இருந்து பக்தனைக் காத்து தன் ஆலயத்துக்கு வரச்செய்து அருள் புரிந்ததால், இந்தத் தலம் மற்றும் முருகனின் பெயரோடு விருப்பாட்சி
எனும் அடைமொழியும் சேர்ந்துகொண்டதாம். பக்தருக்கு முருகன் கொடுத்த வேலாயுதம் மயில் வாகனத்தின் அருகில் நிறுவப்பட்டிருக்கிறது.
சப்தகன்னியின் தோஷம் நீக்கிய ஷண்முகன்!
கிழக்கு நோக்கிய சந்நிதியில் ஓராறு முகமும் ஈராறு கரங்களும் கொண்டு அழகே உருவாகக் காட்சித் தருகிறார் ஆறுமுகநயினார். இவர் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் என்கிறார்கள் அன்பர்கள். பல நூற்றாண்டு காலமாக மண்ணுக்குள் புதைந்திருந்த இந்த முருகப்பெருமான், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயி ஒருவரின் கனவில் தோன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாராம். தான் கொட்டக்குடி ஆற்றின் கரையில் உள்ள வயலில் புதையுண்டு இருப்பதாகவும், தன்னை எடுத்துப் பூஜை செய்தால் தம்மை வணங்குபவருக்கு வேண்டுவன தந்து அருள்பாலிப்பதாகவும் தனது பக்தனான விவசாயியின் கனவில் அருள்புரிந்து மறைந்தார். இதை அந்த விவசாயி ஊர் மக்களிடமும், அப்போது அந்தப் பகுதியை ஆண்ட போடி நாயக்கனூர் ஜமீன்தாரரிடமும் தெரியப்படுத்தினார். விவரமறிந்த ஜமீன்தாரரும், ஊர் மக்களும் முருகப்பெருமானை அவர் கூறியதுபோன்றே கொட்டக்குடி ஆற்றங்கரையில் கண்டெடுத்தார்களாம். அப்படி அவர் வெளிப் பட்டது ஒரு சித்திரை பிறப்பு நன்னாளில்.
மேலும், கோயிலின் முன்னால் உள்ள ஊற்றானது, ஜமீன்தாரர்களின் ஆட்சிகாலத்தில் திருப்பணிகள் செய்யப்பெற்று திகழ்கிறது. தீர்த்தத் தொட்டியின் உள்பகுதியில், சப்த கன்னிமார்கள் அருளும் ஒரே கல்லால் ஆன சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் அசுரனை வதம் செய்யச்சென்ற சப்த கன்னிமார் களில் ஒருத்தி, தவறுதலாக தவம் செய்துகொண்டிருந்த மகரிஷியை அழித்துவிட்டாளாம். இதனால் அவளை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அவள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது. இன்றைக்கும், பக்தர்கள் இங்கு வந்து தீர்த்த நீராடி ஆறுமுகனை வழிபட்டு பிரார்த்தித்தால், துயரங்கள் தோஷங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகியோடி விடும் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள், இப்பகுதி மக்கள்.
நாக தோஷம் தீர்க்கும் நாக சுப்பிரமணியர்!
இது, நாக தோஷம் தீர்க்கும் திருத்தலமும் கூட. மூலவரான ஆறுமுக நயினாரின் அருகில், இடதுபுறம் சிறிய விக்கிரகமாக ஏழுதலை நாகம் புடைசூழ அருள்மிகு நாக சுப்ரமணியர் காட்சி தருகிறார். அதேபோல், இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் செல்வகணபதிக்கு அருகில் நாககணபதி வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் நாகசுப்ரமணியருக்கும், நாக கணபதிக்கும் சிறப்பு பாலபிஷேகம் செய்வதால் தோஷம் நீங்கப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவலிங்க பாணத்தில் ருத்ராட்ச மாலை ஆறுமுக நாயனாரின் இடது புறத்தில் காட்சியளிக்கிறார், ருத்ராட்ச சிவன். இங்குள்ள ருத்ராட்ச சிவபெருமான் குருபகவான் அம்சத்தில், சிரசில் ருத்ராட்ச மாலை அணிந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு. கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம் பெறுபவர்கள், இங்கு வியாழக் கிழமைகளில் ருத்ராட்ச சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.
ஆறுமுக நயினார், நாக சுப்ரமணியர், செல்வகணபதி, நாக கணபதி, ருத்ராட்ச சிவனார் ஆகிய தெய்வங்களுடன் முன்னோடி கருப்பரையும் இங்கே தரிசிக்கலாம். இந்தத் தலத்தின் ஸ்தல விருட்சம் வில்வம். சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய விழா வைபவங்கள் சிறப்புற நடைபெறும். இந்தத் திருக்கோயில் அனுதினமும் காலை 6 முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.