சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியர்கள் உலக அளவில் பல பெருமைக்குரிய பதவிகளை பெற்று வரும் நிலையில் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்தியாவின் தல்வீர் பண்டாரி இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலிருந்து செயல்படும் சர்வதேச நீதிமன்றத்துக்கு, 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினராக உள்ள 193 நாடுகள் மற்றும் பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள 15 நாடுகள் ஆகியவை வாக்களித்து, இந்த நீதிபதிகளைத் தேர்வுசெய்யும். இந்த ஆண்டுக்கான நீதிபதிகள் தேர்வில் இந்தியா, இங்கிலாந்துக்கிடையே கடும் போட்டி நிலவியது. நீதிபதி தேர்வில் வெற்றிபெறுவதற்காக, இங்கிலாந்து ஜனநாயமற்ற முறைகளைக் கையாள்வதாக, இந்தியா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில், நீதிபதி தேர்வில் முன்மொழியப்பட்ட கிறிஸ்டோபர் கிரீன்வுட்டின் விண்ணப்பத்தைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அறிவித்தது. இதையடுத்து, இந்தியா சார்பில் நிறுத்தப்பட்ட தல்வீர் பண்டாரி, பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சர்வதேச நீதிமன்றம் தொடங்கப்பட்டு, கடந்த 71 ஆண்டுகள் வரலாற்றில், இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்கூட இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐ.நா அவையில், மொத்தம் உள்ள 193 வாக்குகளில் 183 வாக்குகளும், பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 15 வாக்குகளும் தல்வீர் பண்டாரிக்கு ஆதரவாக விழுந்தது. இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளுள் ஒருவராக தல்வீர் பண்டாரி 2-வது முறையாகத் தேர்வானார். வரும் 2018 -ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல், அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார். சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்தலில் வெற்றிபெற்றதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply