சர்வதேச வணிக ரியல் எஸ்டேட்: ஆதிக்கம் செலுத்தும் தலைநகர்
பெருநகரங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வணிக வளாகங்களும் அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகமாக இடம்பெற்றிருக்கும். தலைநகர் டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதி அப்படியான ஒன்று. இயல்பாகவே இத்தகைய பகுதிகளில் வாடகை அதிகமாக இருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். அதுவும் அலுவலகங்களுக்கான வாடகை மிக அதிகமாகவே இருக்கும். இது தொடர்பாக, உலகில் அதிக அளவு வாடகை வசூலிக்கப்படும் அலுவலக இடங்கள் குறித்து ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான சிபிஆர்இ ஓர் ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இதன்படி, டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியின் வாடகை நமது ஊகங்களையெல்லாம் கடந்ததாக இருக்கிறது. அந்த அறிக்கையின் படி கனாட் பிளேஸ் பகுதியின் ஒரு சதுர அடிக்கான ஆண்டு வாடகைத் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் ஏழாயிரம் ரூபாய். அமெரிக்க டாலரில் 105.71 என்று சொல்கிறது அந்த அறிக்கை.
இதென்ன பெரிய தொகையா என்று கேட்கிறீர்களா? கணக்கிட்டுப் பாருங்கள். ஆயிரம் சதுர அடி அளவுள்ள அலுவலகம் ஒன்றுக்கான வாடகை மாதத்துக்குச் சுமார் 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வருகிறது. இப்போது வாடகை எவ்வளவு அதிகம் என்பது உணர்ந்துகொள்ள முடிகிறதா? இந்த ஆய்வின் மூலம் அதிக செலவு பிடிக்கும் அலுவலக வாடகை அடிப்படையில் உலகின் பல பகுதிகளை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் இந்த அளவுக்கு அதிகமான வாடகை வசூலிக்கப்படுவதால், இந்தப் பகுதியானது அந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
பாந்த்ரா குர்லா வணிக வளாகம்
இந்தியாவின் வணிகத் தலைநகர் எனச் சொல்லப்படும் மும்பையின் பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தின் வாடகை இதைவிடக் குறைவுதான். பாந்த்ரா குர்லா வணிக வளாகம் இந்த அதிக வாடகைப் பட்டியலில் 19-வது இடத்தையே பிடித்திருக்கிறது. மும்பையில் நரிமன் பாயிண்டோ 30-வது இடத்திலேயே வருகிறது.
சரி இந்தப் பட்டியலில் உலகின் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள் எவை என்று தெரிந்துகொள்ள ஆசையாக உள்ளதா? முதலிடத்தையும் மூன்றாமிடத்தையும் ஹாங்காங்கும், இரண்டாம் இடத்தை சீனாவும் பிடித்திருக்கின்றன. முதலிடத்தைப் பிடித்திருக்கும் மத்திய ஹாங்காங் பகுதியில் வாடகை ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கும் சுமார் 17 ஆயிரம் ரூபாய் அளவில் உள்ளது.
இந்தப் பட்டியலில் இந்த நாடுகளுக்குப் பிறகுதான் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பகுதிகளே வருகின்றன. இந்தியாவின் கனாட் பிளேஸ் ஒன்பதாவது இடத்தில் வருகிறது. இதற்கு அடுத்த இடத்தில் அதாவது பத்தாவது இடத்தில்தான் ரஷ்யாவின் மாஸ்கோ வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தியாவின் வர்த்தக ரியல் எஸ்டேட் முன்னேற்றம் கண்டு வருகிறது என்றும் இந்த முன்னேற்றம் காரணமாகப் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருக்கிறது என்றும் சொல்கிறது சிபிஆர்இ ஆய்வு நிறுவனம்.. டெல்லியின் கனேட் பிளேஸ் இந்தியாவின் இதயப் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பகுதி நகரின், நாட்டின் பிற பகுதிகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது, வர்த்தகத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிரம்பியதாக இந்தப் பகுதி இருக்கிறது. உள் கட்டமைப்புகளும் மேம்பட்ட தரத்தில் உள்ளன. ஆகவே வாடகை அதிகம் என்றாலும் அதற்கேற்ற தரமான அலுவலகம் அமைக்க இந்தப் பகுதி உத்தரவாதம் தருகிறது. இந்தக் காரணங்கள் காரணமாக எந்த வகையான அலுவலகத்துக்கும் ஏற்ற பகுதியாகவே இது உள்ளது.
சிபிஆர்இ நிறுவனத்தின் இந்த அறிக்கைக்காக சுமார் 121 இடங்களில் ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். அலுவலக வாடகைச் சந்தையில் வாடகை அதிகரிக்க அல்லது குறைய முதன்மையான காரணங்கள் எவை என்பவற்றை அடையாளம் காணும் வகையிலேயே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வானது பிரைம் ரெண்ட் எனச் சொல்லப்படும் உச்சபட்ச வாடகை என்னும் அடிப்படையிலேயே நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் பட்டியலில் பிரதான இடத்தைப் பிடித்தவையாக ஆசிய பசிபிக் நாடுகளே உள்ளன. முதல் பத்து இடங்களில் ஏழில் ஹாங்காங், சீனா போன்ற நாடுகளே இடம்பெற்றிருக்கின்றன. இந்த உச்சபட்ச வாடகையானது சராசரியாக 1.8 சதவீதம் வளர்ச்சி காண்கிறது. பெங்களூரு, சிட்னி, ஹாங்காங், ஆக்லாந்து போன்ற இடங்களில், அதாவது இந்த ஆசிய பசிபிக் நாடுகளில் அலுவலக வாடகைச் சந்தை விரைவாக முன்னேற்றம் காண்பதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கம் முக்கியப் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். எப்படியோ ஏதாவது ஒருவகையில் ரியல் எஸ்டேட்டுக்கு அனுகூலமாக அமைந்தால் சரிதான் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன கட்டுமான நிறுவனங்கள்.