‘சர்வம் தாளமயம்’ திரைவிமர்சனம்
ஒரு ஏழை மிருதங்கம் செய்யும் தொழிலாளி கர்நாடக சங்கீதத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஏற்படும் பிரச்சனைகள், இன்னல்கள் தான் இந்த படத்தின் சுருக்கம்
கர்நாடக சங்கீதம் என்றாலே ஒரு பிரிவினர்களுக்கு மட்டும்தான் என்று காலங்காலமாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த சங்கீதம் அனைவருக்கும் சமம் என்ற அழுத்தமான செய்தியை இயக்குனர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் கூறியுள்ளார்.
மிருதங்கம் செய்து கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு விற்பனை செய்யும் குமாரவேல் மகன் தான் ஜிவி பிரகாஷ். விஜய் ரசிகராக பொருப்பின்றி ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு மிருதங்கம் மீது ஈர்ப்பு வருகிறது. எனவே மிருதங்க சக்கரவர்த்தி நெடுமுடிவேணு அவர்களிடம் முறைப்படி கற்றுக்கொள்ள விரும்புகிறார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அவமானங்கள், அதன் பின் அவருடைய இசைத்தேடல், கடைசியில் சுப முடிவுதான் இந்த படத்தின் விரிவான கதை
ஜிவி பிரகாஷ் ஒரு இசையமைப்பாளர் என்பதால் ஒரு இசை வித்வான் கேரக்டரை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளார். நாச்சியார் படத்திற்கு பின் அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு இந்த படம். அதை அருமையாக பயன்படுத்தியுள்ளார்.
நாயகி அபர்ணா வரும் காட்சிகள் கவிதை போல் இதமாக உள்ளது. வெகு இயல்பான இவருடைய நடிப்பு அவருக்கு அதிக வாய்ப்புகளை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிருதங்க வித்வான் கேரக்டரில் நடித்திருக்கும் நெடுமுடிவேணுவுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை.
வினீத், குமாரவேல், ஆகியோர்களின் நடிப்பும் ஓகே.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும் வகையில் உள்ளது.
இசை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த படத்தை இயக்கியுள்ள ராஜீவ் மேனனுக்கு பாராட்டுக்கள். இருப்பினும் இதே விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம், ஜாதி, மதம் மற்றும் விஜய் ரசிகர் மன்ற காட்சிகள் தேவையில்லாதது. இருப்பினும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு அருமையான இசைப்படம் என்பதே இந்த படத்திற்கான விமர்சனம்
3.5/5