சாக்ஷிக்கு குவியும் பரிசுகள்!
ஒலிம்பிக் தொடங்கி 12வது நாளில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கிடைத்திருக்கிறது. அந்த பதக்கத்தை வென்று தந்தவர் சாக் ஷி மலிக். வெண்கலம் வென்றாலும் இந்தியாவை பொறுத்த வரை அவர் தங்க மங்கைதான். இப்போது பதக்கம் வென்றதையடுத்து, அவருக்கு பரிசுகள் குவியத் தொடங்கியிருக்கின்றன. அதன்படி, சாக் ஷிக்கு கிடைக்கப் போகும் பரிசுத் தொகைகளை பார்க்கலாம்.
ஒலிம்பிக் தொடங்கும் முன்னரே ஹரியானா அரசு, தங்கம் வெல்பவர்களுக்கு ரூ. 6 கோடியும் வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.4 கோடியும் வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ. 2 கோடியும் பரிசாக அறிவித்திருந்தது. சாக்ஷி , இப்போது வெண்கலம் வென்றிருப்பதால், ரூ. 2 கோடி பரிசு கிடைக்கும். அத்துடன் நிலமும் வழங்கப் போவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவர்களுக்கு ஒரு கோடியும் வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ. 75 லட்சமும் வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ. 50 லட்சமும் ரயில்வே சார்பில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. சாக்ஷிக்கு அந்த வகையில், ரூ. 50 லட்சம் கிடைக்கும்.
இது வரையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது இல்லை. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரான என். ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்ட பின், பயிற்சியாளர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்கம் வென்றால் ரூ. 50 லட்சமும் வெள்ளி வென்றால் ரூ.30 லட்சமும் வெண்கலம் வென்றால் ரூ. 20 லட்சமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் வெண்கலம் பரிசு வெல்பவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. நடிகர் சல்மான்கான்,ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளார். மத்திய அரசும் தனியாக சாக் ஷிக்கு ரொக்கப்பரிசு அளிக்கலாம்.
அந்த வகையில் சாக் ஷிக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் பரிசுத் தொகை கிடைக்கலாம்.