சானிட்டரி நாப்கின் – புற்றுநோயை ஏற்படுத்துமா?
‘பருவமடைந்த ஒரு பெண்ணிடம் மாதவிடாய் என்றால் என்ன? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் தன் வெட்கத்தையும் தயக்கத்தையும் மட்டுமே பதிலாக தருகிறாள்..”
இது ‘மாதவிடாய்’ என்கிற ஆவணப்படத்தில் வரும் ஒரு காட்சி.. தன் உடலின் இயற்கை மாற்றத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளவும், பேசவும் தயங்குவதுதான் பெண்ணின் உடல் ரீதியிலான பல பிரச்னைகளுக்குக் காரணம்.
இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகிதப் பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை: 65 சதவிகிதப் பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிகள்.
இவை ஒரு பக்கம் இருக்கட்டும்… நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும். அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு ‘பாலிமர் ஜெல்’ எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது. இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது. சிலர் பாலிமர் ஜெல்லுக்கு பதிலாக ‘செல்லுலோஸ்’ என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
சானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்?
* பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.
* நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.
* ஓர் அந்நியப் பொருளை உள்ளாடையில் வைத்திருக்கும்போது, அது தொடைகளை உரசுவதால் ஒரு சிலருக்குத் தொடைகளில் புண்கள் ஏற்படுதல், பிறப்புறுப்புப் பகுதி வறண்டு போவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான ஆயின்மென்ட் தடவுவதன் மூலம் பாதிப்பிலிருந்து மீளலாம்.
நாப்கின்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உண்மையா?
* நாப்கின்களில் உள்ள ‘டையாக்சின்’ என்ற வேதிப்பொருளானது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது, விலங்குகளுக்கான பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மனிதர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
* நாப்கின்களில் உள்ள ‘பாலிபுரொப்பிலின்’, ‘பி.பி.ஏ’ போன்ற வேதிப்பொருள்கள், சருமப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதும், அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாததுதான்.
* டேம்பூன் என்பவை, மாதவிடாய்க் காலங்களில் பிறப்புறுப்பின் உள்ளே பொருத்திக்கொள்ளக் கூடியவை. இவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாப்கின்களுக்கு அந்த பயம் தேவையில்லை.
* நாப்கின் குறித்த பயம் உள்ளவர்கள் சுத்தமாக துவைத்து காயவைத்த காட்டன் துணிகளை நாப்கின்களாக பயன்படுத்தலாம். அவற்றையும் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.
நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
* மாதவிடாய் நாள்களில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகமுள்ள நாள்களில் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நலம்.
* துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை, சோப்புப் போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்கவும். பிறகு, மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.
* காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சானிட்டரி நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்?
நாப்கின்களைப் பொறுத்தவரை, அதனை பயன்படுத்துபவர்களைவிட மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள்தான் அதிகம். ஒரு பெண் உபயோகித்துத் தூக்கி எறியும் நாப்கின் கழிவுகள், சராசரியாக ஒரு வருடத்துக்கு 150 கிலோகிராம் என்கிறது ஓர் ஆய்வு. இதில் உள்ள பிளாஸ்டிக் அடுக்குகள், மண்ணிலிருந்து முற்றிலுமாக மறைய சுமார் 800 வருடங்கள் ஆகலாம் எனக் கணக்கிட்டுள்ளனர். நாப்கின்களை செய்தித்தாளில் சுற்றி குப்பையில் எறியும்போது, அதைக் குப்பையிலிருந்து பிரித்தெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுகளான ‘ஹெப்பட்டைட்டிஸ் பி’, ‘ஹெப்பட்டைட்டிஸ் சி’ போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உபயோகித்த நாப்கின்களை நன்கு அலசி பின்பு பேப்பரில் சுற்றி வீசுவது நல்லது. முடிந்த அளவு நாப்கின்களை ‘இன்சினிரேஷன்’ (Incineration) என சொல்லக்கூடிய முறையில் எரித்துச் சாம்பலாக்கி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும்.