சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 6 விஷயங்கள்…
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள் எனச் சிலவற்றைப் பெரியவர்கள் வலியுறுத்தக் கேள்விப்பட்டிருப்போம். அவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் புரியாமல் அலட்சியமும் செய்திருப்போம். சாப்பிட்டவுடன் சில விஷயங்களைச் செய்வதால் உடல் சந்திக்கும் மாற்றங்களைப் புரிந்துகொண்டால் பெரியவர்கள் பேச்சில் உள்ள உண்மை விளங்கும்.
சிலருக்குச் சாப்பிட்டு முடித்ததும் சிகரெட் பிடித்தால்தான் சாப்பிட்டதன் திருப்தியையே உணர முடிவதாக நினைப்பார்கள். புகைப்பதே தவறு. அதிலும் சாப்பிட்ட உடனே புகைப்பது, ஒரே நேரத்தில் 10 சிகரெட் பிடிப்பதற்குச் சமம்.
எப்போதுமே குளித்த பிறகு சாப்பிடுவதுதான் சிறந்தது. சாப்பிட்டதும் குளிப்பதன் மூலம் கைகால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் ஓய்வில்லாத தன்மையை உணரும்.
திருமணங்கள், பார்ட்டி என எல்லா விருந்துகளிலும் சாப்பாட்டுடன் வகை வகையான பழங்களைப் பரிமாறுவது ஃபேஷனாக இருக்கிறது. வீடுகளிலும் சாப்பாட்டுடன் பழம் சாப்பிடுகிற பழக்கம் பலருக்கு இருக்கிறது. பழங்களை எப்போதுமே சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னதாகவோ, சாப்பிட்ட முக்கால் மணி நேரத்துக்குப் பிறகோதான் உண்ண வேண்டும். சாப்பிட்ட உடனேயே பழங்களையும் உண்பது நெஞ்செரிச்சல், ஏப்பம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையே குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்வது செரிமானக் கோளாறை ஏற்படுத்தி, ஒருவித அசௌகர்யத்தையும் தரும். பருமனுக்கு வழிவகுக்கும். தூக்க நேரத்தில் மாற்றத்தை உருவாக்கி, தூக்கமின்மைக்குக் காரணமாகும்.
விருந்தே சாப்பிட்டாலும் கடைசியாக சூடாக ஒரு கப் காபியோ, டீயோ குடித்தே ஆக வேண்டும் சிலருக்கு. அது மிகவும் தவறு. காபி, டீ, கோலா, கஃபைன் கலந்த பானங்களைக் குடிப்பதால் உணவின் மூலம் உடலுக்குள் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது தடுக்கப்படும்.
உணவுக்குப் பிறகு ஐஸ்கீரிம் சாப்ப்பிடுவார்கள் சிலர். அது ரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை அதிகரித்து உடல் பருமனுக்கு வழி வகுக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.