சாமானியனை பாதிக்குமா ஜிஎஸ்டி?

சாமானியனை பாதிக்குமா ஜிஎஸ்டி?

புலி வருது புலி வருது என்பது போல் பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி மத்திய அரசின் அதீதமான அக்கறையுடன் ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் பாராளுமன்ற அவையில் அமலுக்கு வந்தது. இதன் மூலம் இத்தனை காலம் இருந்த உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி போன்ற முக்கிய 17 மறைமுக வரிகளை அனைவரும் மறந்து விடலாம் என்கிற தருணத்திற்கு ஆளாக்கியது.

ஏற்கெனவே 158 நாடுகளில் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி பயன்களைப் பார்த்த பிறகு ஏன் இந்த தயக்கம்? ஏன் இத்தனை ஆண்டுகள் பொறுமை காத்தோம்? என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. தவிர பெரும்பாலான நாடுகளில் ஒரே வரி விகிதம் இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் பல்வேறு விகிதங்கள் என்பதும் பொதுவான கேள்வி.

சாமானியனுக்கு இதன் தாக்கம் எப்படி இருக்கும் ?

வரி மேல் வரி விதிப்பு நீங்கி பூரண வெளிப்படைத் தன்மையாகவும் எளிமையாகவும் இருக்கும் என்று அரசு நம்பிக்கை அளித்துள்ளது. அதற்கேற்ப ஜிஎஸ்டியில் 0%, 5%, 12%, 18%, 28% வரி விகிதங்களை அமைத்துள்ளது. முக்கியமாக மக்களின் வருமானத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் ஏற்ற வகையில் வரி விகிதங்களை அமைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களான உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், அத்தியாவசிய மருந்துகள், பால், மோர், பிரட், இயற்கைத் தேன், அனைத்து வகை உப்புகள், வெல்லம், அசைவ உணவுகளான மட்டன், சிக்கன், மீன், உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஏற்கனவே இருந்த வரி நடைமுறையில் சுமார் 4% வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வரி இல்லாமல் இவை அனைத்தையும் நுகர்வோர் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் சேவை வருமானம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60%க்கும் மேல் உள்ளது. பெரும்பாலான சேவைகள் ஏற்கனவே உள்ள சேவை வரியான 15%-ல் இருந்து ஜிஎஸ்டியின் மூலம் 18% உயர்ந்துள்ளது. இதனால் சேவை சம்பந்தப்பட்ட பொருட்கள் விலைகள் நிச்சயம் அதிகரிக்கும். முதியோர்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் வரி விலக்கு பெறுகின்றன.

ஜிஎஸ்டிக்கு முந்தைய நடைமுறையில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், வாசனைப் பொருட்கள், ப்ரெஷ் க்ரீம், டீ, காபி, சமையல் எண்ணெய் பொருட்கள், ஸ்கிம்டு பால் பவுடர், பாக்கெட் உணவுகள், உலர் முந்திரி மற்றும் திராட்சை, பிராண்டட் பன்னீர் உள்ளிட்ட பொருட்களுக்கு 9% வரி செலுத்தி வந்தோம். ஜிஎஸ்டி-யில் இவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு, மண்ணெண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட எரிவாயு சார்ந்த பொருட்களும் அகர்பத்திகள், பட்டங்கள், ரெவின்யூ ஸ்டாம்ப்கள், லைஃப் போட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இன்சுலின் போன்றவைக்கும் 5% வரி விதிப்பு செலுத்த வேண்டும்.

காலணிகளுக்கு வரியா?

1,000 ரூபாய்க்கு துணிகள் மற்றும் 500 ரூபாய்க்கு கீழ் காலணிகள் வாங்கினாலும் 5% வரியே. இதற்கும் மேலான தொகைக்கு 12% வரி செலுத்த வேண்டும். இது நுகர்வோருக்கு வரிச்சுமையை ஏற்படுத்தலாம்.

மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்களுக்கு 12 மற்றும் 18% வரி விகிதங்களே விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 9 முதல் 15% வரிவிதிப்பில் இருந்த பொருட்களுக்கு தற்போது 12% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அப்படி பார்க்கையில் வெண்ணெய், சீஸ், நெய், மிருகங்களின் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட மாமிசப் பொருட்கள், கெட்சப், சாஸ், பாக்கெட்களில் இருக்கும் உலர் பழங்கள், நொறுக்குத் தீனிகள், பாட்டில்களில் உள்ள பழச்சாறுகள், பல் பொடி, போன்றவற்றுக்கு 12% வரி. ஜிஎஸ்டியின் கீழ் இனி கோயில் பிரசாதம் கொடுக்கக்கூடிய பாத்திரம் 18% வரி விகிதத்தில் வரும்.

கேக்குகள், பேஸ்ட்ரீஸ், உடனடி உணவுக் கலவைகள், பிஸ்கட், பாஸ்தா, மையோனீஸ், கார்ன் ப்ளேக்ஸ், ஐஸ்க்ரீம்ஸ், மினரல் வாட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு 18% வரி விதித்துள்ளது அரசு. பிரிண்டர் சர்க்யூட், கேமரா, ஸ்பீக்கர், மானிட்டர்ஸ், எலெக்ட்ரிக்கல் டிரான்ஸ்ஃபார்மர், சிசிடிவி, நோட் புக்ஸ், இரும்புப் பொருட்கள், டிஷ்யூ பேப்பர்கள், காஜல் பென்சில்கள், அலுமினியம் ஃபாயில்கள், மூங்கில் ஃபர்னிச்சர்கள், நீச்சல் குளம் உள்ளிட்டவையும்18%-க்குள் வருகின்றன.

கார் விலை குறையுமா?

கார்களை பொறுத்த வரையில், சொகுசு கார்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரையில் தோராயமாக 45% வரை வரி இருந்து வந்தது. தற்போது ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரியான 28% மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சொகுசு பொருட்களுக்கும் மிக அதிக சொகுசு பொருட்களுக்குமான வித்தியாசம் ஜிஎஸ்டி-யில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக ரயில் பயணத்தில் தொலைதூர பயணத்துக்கு ஒரு மனிதனுக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை டிக்கெட் அடிப்படைத் தேவை. அதுவே தனிப்பட்ட கூடுதல் வசதிக்காக ஏ.சி த்ரீ-டயரில் பயணிப்பது சொகுசு. ஆகவே அவர்களுக்கு கூடுதல் வரி. மேலும் இதைவிட கூடுதல் வசதிக்காக ஏ.சி. டூ டயரில் பயணிப்பவர்களுக்கு அதிக சொகுசு வரி. பான் மசாலா, சிகரெட்கள், பந்தயங்களுக்கு பயன்படுத்தும் கார்கள் என சொகுசுப் பொருட்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் கூடுதல் வரி விதிக்கப்படும்.

ஹோட்டல்களில் வாங்கும் உணவுகளின் விலை அதிகரிக்குமா?

ஹோட்டல்களைப் பொறுத்த வரை 1,000 ரூபாய்க்கு குறைவான வாடகையாக இருக்கும் ஹோட்டல்களுக்கு முன்பிருந்த வரிக் கட்டமைப்பே. ரூ.75 லட்சத்துக்கும் குறைவான மொத்த வருமானம் உள்ள ஹோட்டல்களுக்கு 5% வரி மட்டுமே. 1,000 முதல் 2,500 ரூபாய் வரை வாடகை உள்ள ஹோட்டல்களுக்கு 12% வரி. 2,500 முதல் 7,500ரூபாய் வரை வாடகை உள்ள ஹோட்டல்களுக்கு 18%. மேலும் நொறுக்குத் தீனிகளுக்கு 12% வரி. சூடான நொறுக்குத் தீனிகள் நட்சத்திர உணவு விடுதிகளில் சாப்பிட்டால் 18% வரி. உணவு விடுதிகளைப் பொறுத்த வரை சாதாரன உணவு விடுதிகளுக்கு ஏற்கனவே இருந்த 6% வரியில் ஜிஎஸ்டியில் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. உணவு விடுதிகள் என்றால் 10.6% வரியில் இருந்து 18% வரியாக உயர்ந்துள்ளது.

உதாரணமாக முருகன் இட்லி கடையில் ரூ.100க்கு சாப்பிட்டால் ரூ.18 வரியாக மட்டும் செலுத்துவதை பார்த்தவுடன் ஜீரணமாகிவிடும் ஆனால் அதுதான் நிதர்சனம்.

சினிமா டிக்கெட் விலை

பொழுது போக்கில் முக்கியப் பங்கு வகிப்பது சினிமாத்துறை. சினிமா துறைக்கு 18% வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சினிமா துறைக்கு ஒற்றை இலக்க எண்ணில் தான் வரி விகிதம் உள்ளது. இந்தியாவில் மட்டுமே இரட்டை இலக்க வரி விகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் முதல் நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களின் பில்லில் வரி விவரங்களை பார்க்க வேண்டும். இத்தனை நாள் பெரும்பாலும் விற்பனை வரியை மட்டும் பார்த்து வந்த நமக்கு மொத்த வரியாக பெரிய விகிதத்தை பார்க்கும் போது சற்று மலைப்பாகத்தான் இருக்கும். சோதனைகளை கடந்தால்தான் சாதனைகள் என்ற வெற்றிக்கனியை பிடிக்க முடியும் என்பதற்கேற்ப இந்த வரிமாற்றம் இந்திய பொருளாதாரத்தின் வரலாற்று மாற்றமாக அமையும்.

 

Leave a Reply