சிகரெட் பிடிக்காதீங்கனு சொல்லலை… ஒரு நாளைக்கு 5 சிகரெட்னா…?

சிகரெட் பிடிக்காதீங்கனு சொல்லலை… ஒரு நாளைக்கு 5 சிகரெட்னா…?

smokesmoke
நம் உடலில் சிகரெட் எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதே அளவு பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஓட்டையைப் புகையிலை ஏற்படுத்துகிறது. 30 வயதுடைய ஒரு நபர், ஒரு நாளைக்கு 5 சிகரெட்களைப் பிடித்தால், 60 வயதில் அவர் ஓய்வு பெறும் போது ரூ.1 கோடி நஷ்டப்பட்டிருப்பார். இந்த “உலக புகையிலை எதிர்ப்பு தினம்” அன்று புகையிலையால் ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றிப் பார்க்கலாம்.
1. சிகரெட்டால் ஏற்படும் செலவு:

இந்தச் செலவுதான் நம் பொருளாதாரத்தில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சீகரெட்டின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை இருக்கும். ஆனால், ரூ.12 ஆக வைத்துக் கொள்வோம். ஒரு நாள் 5 சிகரெட்களைப் பிடிப்பவருக்கு ஏற்படும் செலவு ரூ.60. ஒரு மாதம் செல்வு ரூ.1,800. ஒவ்வொரு வருடமும் இது 8% அதிகரிக்கிறது என பார்த்தால், 30 வருடத்தில் நம் செலவு மட்டும் ரூ.24.47 லட்சம். இந்தத் தொகையை நாம் 9 சதவிகிதத்தில் முதலீடு செய்தால் ரூ.69.23 லட்சம் பணத்தைப் பெறலாம். ஆனால், அதை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.

(இது நிரந்தரமான விலை அல்ல. வருடந்தோறும் சராசரி 20% வரை சிகரெட் விலை அதிகரிக்கிறது. நாம் 8% விலை உயர்வை standard ஆக வைக்கிறோம்).

2. மருத்துவச் செலவு:

சிகரெட் பெட்டிகளிலும், விளம்பரங்களிலும் காட்டப்படும் அபாயகரமான, கொடூரமான நோய்களுக்கு எல்லாரும் ஆட்படவில்லை என்றாலும் சிறு சிறு பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கும். நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகளவு ஏற்படும். மாரடைப்பு, புற்றுநோய் முதலியனவும் வருவதற்காக வாய்ப்புகள் அதிகம். இதற்கான மாதாந்திரச் செலவு மாதம் ரூ.400 என வைத்துக் கொள்ளலாம். ஓர் ஆண்டிற்கு 12% அதிகரித்தால், 30 வருடத்தில் ரூ.11.59 லட்சங்களைச் செலவழித்திருப்போம். இந்தத் தொகையையும் 9 சதவிகிதத்தில் முதலீடு செய்தாம் ரூ.26.7 லட்சம் பெறலாம்.

(ஆண்டுதோறும் மருத்துவச் செலவு 12% அதிகரித்து வருகிறது. இதில் 12% சராசரியாக எடுத்துள்ளோம்).

3. காப்பீட்டுச் செலவு:

காப்பீட்டாளர்கள் புகை பிடிப்பவர்களுக்கு, பிரீமியம் அதிகம் பெருகிறார்கள். காரணம் இவர்கள் நோய் வாய்ப்படுவதற்காக வாய்ப்புகள் ஜாஸ்தி. ஒருவரின் வயது, ஒரு நாள் எத்தனை சிகரெட்டுகள் பிடிக்கிறார் ஆகியவையைப் பொறுத்து ரிஸ்கின் அளவு மாறுபடும். 30 வயதுடைய ஒருவர் ரூ.1 கோடி காப்பீட்டைப் பெற மாதம் ரூ.460 அதிகப்படியாக அளிப்பார். 30 வருடத்திற்கு, ரூ.1.65 லட்சங்களைச் செலவழிக்கிறார். இதையும் 9 சதவிகிதத்தில் முதலீடு செய்தால் பெறும் தொகை ரூ.7.52 லட்சம்.

ஆக மொத்தம், ரூ.69.23 லட்சம் (சிகரெட் செலவு) + ரூ.26.7 லட்சம்(மருத்துவச் செலவு)+ ரூ.7.52 லட்சம்(காப்பீட்டுச் செலவு) = ரூ.1.03 கோடி.
இது பொருளாதார ரீதியான நஷ்டம் மட்டுமே. இதைத் தவிர, நமக்கு ஏற்படும் நஷ்டங்கள் பற்பல.

குடும்பம்:

ஆய்வுகளின்படி புகை பிடிப்பவர்களின் குழந்தைகளுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குடும்பம் எனும் பெரும் செல்வத்தை இழக்க நேரிடலாம்.

வாழ்க்கைக் காலம்:

புகை பிடிப்பவர்களின் சராசரி வாழ்வின் காலம் மிகவும் குறைவு. ஒரு சிகரெட் பிடித்தால் நம் வாழ்வில் 12 நிமிடங்களை இழக்கிறோம். இதை வைத்துக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்!

வாழ்க்கைத் தரம்:

புகையிலையால் நம் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகிறது. கடினமான வேலைகளைச் செய்ய முடிவதில்லை.

இப்படி ஒரு சிறு இன்பத்திற்காக நம் வாழ்வையே இழப்பது நியாயமா?

இதற்கு மாற்றாக நமக்கு இப்போது பல வழிகள் பிறந்துள்ளன. புகையிலையை விட்டொழிக்க வேண்டும் என எண்ணினால் மட்டுமே போதும்.

Leave a Reply