சித்துவை விமர்சித்தால்…இம்ரான்கான் எச்சரிக்கை

சித்துவை விமர்சித்தால்…இம்ரான்கான் எச்சரிக்கை

சித்துவை விமர்சிப்பவர்கள் அமைதிக்கு எதிரானவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கையுடன் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வாவை சித்து கட்டியணைத்துக் கொண்டார். இதனை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சித்துவையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சித்துவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது பதவி ஏற்பு விழாவுக்கு வந்த சித்துவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியின் தூதுவராக வந்த சித்து மீது பாகிஸ்தான் மக்கள் அன்பைக் காட்டினர். இதற்காக சித்துவை விமர்சிப்பவர்கள் அமைதிக்கு எதிரானவர்கள்.

அமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது. காஷ்மீர் பிரச்சினை உட்பட எல்லா பிரச்சினைகளையும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சித்து கூறும்போது, ”எனக்கு பத்துமுறை இம்ரானிடமிருந்து அழைப்பிதழ் வந்தது. அதனைத் தொடர்ந்து நான் இந்திய அரசிடம் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அனுமதி கேட்டேன். எனக்கு உடனடியாக வழங்கப்படவில்லை. நான் காத்திருந்தேன். அதனைத் தொடர்ந்து எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி கூட பாகிஸ்தானுக்கு பயணம் செய்திருக்கிறார்.ஆனால் அவரைப் பற்றி ஏன் விமர்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

Leave a Reply