சினிமா வீடு: கானாடுகாத்தான் அரண்மனை – கட்டிடக் கலையின் அடையாளச் சின்னம்

சினிமா வீடு: கானாடுகாத்தான் அரண்மனை – கட்டிடக் கலையின் அடையாளச் சின்னம்

சினிமாவில் சில பிரமாண்டமான வீடுகளை பார்த்திருப்போம். பாட்டி, தாத்தா,பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா எனக் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த வீடுகளைப் பல திரைப்படங்களில் கண்டிருப்போம். அந்த வீடு தான் கானாடு காத்தான் மாளிகை. காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கோட்டைபோல் கட்டப்பட்ட வீடு தான் அது.

இந்த மாளிகை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியாரால் இந்த வீடு வடிவமைக்கப்பட்டது. கானாடுகாத்தான் மட்டுமல்லாது அருகிலுள்ள கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாடு ஆகிய ஊர்களிலும் இதே போன்ற பிரம்மாண்டமான வீடுகளைப் பார்க்கலாம். செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை.செட்டியார்கள் தங்கள் வீட்டு விசேஷங்களையும் வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். கானாடுகாத்தான் அரண்மனை போன்ற சில வீடுகளில் அதைவிட அதிகமான அறைகள் கொண்டதாக இருக்கும். வீடு வசீகரிக்கும் வண்ணத்தால் ஆனவையாக இருக்கும். பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி வண்ணம் தீட்டியிருப்பார்கள்.

வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைந்திருக்கும். வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கியிருப்பார்கள். நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் இன்றைய பர்மா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெற்றிகரமாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள்.

அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இவர் வீட்டுக்குத் தேவையான மரங்களையும் பகுதிப் பொருள்களையும் தருவித்தார்கள். குறிப்பாக மரங்கள். செட்டிநாட்டு வீடுகளின் சிறப்பம்சங்களுள் ஒன்று இந்த மர வேலைப்பாடுகள். பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட தேக்கு மரப் பலகையில் செய்யப்பட்ட கதவுகளும் ஜன்னல்களும் இன்றும் செட்டியார்களின் கலையம்சத்தை உணர்த்துகின்றன.

வீடு முழுதும் பல தூண்கள் உள்ளன. சில தூண்களில் வித்தியாசமான பொம்மைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் பிற நாட்டினர்களின் பொம்மை உருவங்கள். இவையும் செட்டியார்களின் கடல் கடந்த வாணிபச் சிறப்பின் சாட்சியங்கள். கேரளத் தொட்டிக்கட்டி வீடுகளைப் போன்று நடுவே பெரிய வானவெளி அமைப்பு உள்ளது. வீட்டுக்கான காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு வருகிறது. முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில். இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன.

செட்டிநாட்டு வீடுகளின் மற்றொரு சிறப்பு ஆத்தங்குடி டைல்கள். இன்றைக்கு செட்டிநாடு வீடுகள் மட்டுமல்லாது எல்லாப் பகுதிகளில் இந்த டைல்களின் பயன்பாடு பரவலாகியுள்ளது. ஆனால் தொடக்கத்தில் செட்டிநாடு வீடுகளுக்காக இந்த டைல்கள் தயாரிக்கப்பட்டன. கண்ணாடிகளையும் இயற்கை வண்ணங்களையும் கொண்டு இந்த டைல் தயாரிக்கப்படுகிறது. இது மற்ற டைல்களைப் போலத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல. வீட்டுக்கே வந்து தளத்தில் உருவாக்கப்படுபவை. இந்த டைல்கள் அதிகமான பராமபரிப்புக் கோருபவை.

ஆனால் பார்ப்பதற்கு வசீகரமானவை. இந்த வகை டைல்கள்தாம் கானாடுகாத்தான் அரண்மனைத் தளத்தை அழகுபடுத்துகின்றன. இந்த வீட்டின் தனித்துவம் சமையலறை அல்லாது உணவுப் பொருள்களைச் சேமிக்கத் தனியறைகள் உள்ளன. அம்மி, ஆட்டு உரல் ஆகியவற்றுக்கும் தனியறை. கானாடுகாத்தன் அரண்மனை மட்டுமல்ல இதேபோன்ற வீடுகள் செட்டிநாடு என அழைக்கப்படும் அந்தப் பகுதி ஊர்கள் பலவற்றிலும் உள்ளன. இவை இன்று மனிதர்கள் வாழும் வீடுகள் மட்டுமல்ல; அதையும் தாண்டி தமிழ்நாட்டு வீட்டுக் கட்டுமானக் கலையின் அடையாளங்களாக பெயர்பெற்றுள்ளன.

Leave a Reply