சினிமா வீடு: ஜோதிகா ‘சந்திரமுகி’ ஆன வீடு
கர்நாடக மாநிலத்தில் , அரசர் வாழ்ந்த அரண்மனை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மைசூர் அரண்மனைதான், ஆனால் கர்நாடகாவில் புகழ்பெற்ற இன்னொரு அரண்மனையும் இருக்கிறது. அதுதான் பெங்களூர் பேலஸ். பெங்களூரு கண்டோன்மண்ட் ரயில் நிலையத்தின் மிக அருகில் அமைந்திருக்கிறது, இந்த அரண்மனை. இந்த அரண்மனைக்கு இன்னொரு பெருமையும் இருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘சந்திரமுகி’ படத்தின் பல காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டுள்ளன.
சந்திரமுகி படப்பிடிப்புக்காக இந்த அரண்மனையின் பல அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஒரு நாளின் வாடகை மட்டும் சுமார் ரூ. 1.5 லட்சம். படத்தில் காட்டப்படும் சந்திரமுகியின் அறை, உண்மையில் இந்த அரண்மனையின் அரசர் தங்கும் அறை. படத்தில் நடிகை மாளவிகா, படிக்கட்டுகளில் ஓடிவந்து மயங்கி விழும் காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன.
பல மந்திரக் கயிறுகள் கட்டப்பட்டுப் பெரிய பூட்டுப் போடப்பட்டிருக்கும் சந்திரமுகியின் அறைக் கதவு, படக்குழுவினரால் அமைக்கப்பட்ட செட். அது உண்மையான அறையின் கதவுக்கு முன்னால் பொருத்தப்பட்டது. கதவைத் தவிர்த்து மற்ற அறைகள் அனைத்தும் உண்மையானதே. படத்தில் ஜோதிகா ஜன்னல் வழியாக நடனக் கலைஞரான வினீத் வீட்டைப் பார்த்துத் தன் காதலன் எனக் கற்பனைகொள்வது மாதிரியாகக் காட்சி இருக்கும்.
அந்தக் காட்சியில் வரும் வினீத்தின் வீடு, அங்கே அரண்மனைக்கு அலுவலக ரீதியாக வருபவர்கள் ஓய்வெடுக்கும் விருந்தினர் மாளிகை. இங்கு பல இந்திப் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனை 1887-ல் கட்டி முடிக்கப்பட்டது. மைசூர் ராஜ வம்சத்துக்குச் சொந்தமானது.
இந்த அரண்மனை லண்டனில் இருக்கும் வின்ட்சர் கோட்டையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதன் கீழ்தளத்தில் மிகப் பெரிய நடுமுற்றம் உள்ளது. இந்தப் பகுதியில் செராமிக் டைல்களும் கிரானைட் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. கீழ்த் தளத்தில் மிகப் பெரிய கேளிக்கை அரங்கும் உள்ளது. முதல் தளத்தில் தர்பார் அறை உள்ளது. தர்பார் என்பது அரச சபை. இந்த அறையில்தான் ராஜாங்க அலுவல்கள் எல்லாம் நடக்கும். அதற்குச் செல்லும் படிக்கட்டுகள் அகலமானவை மட்டுமல்ல; மிகக் கம்பீரமானவை. அதன் இருபுறத்திலும் கம்பீரமான சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
தர்பார் அறையின் இருபுறங்களிலும் ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. ஜன்னல்கள் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிரேக்க, டச்சு ஓவியங்களால் உள்சுவர் அழகுபடுத்தப்பட்டுள்ளது. நாற்காலிகள், மேஜைகள் எல்லாம் சீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பிரம்மாண்டமான இந்த அரண்மனையை மக்கள் பார்ப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்னர்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் நுழைவுக் கட்டணம் இந்தியர்களுக்கு ரூ. 225. வெளிநாட்டவர்களுக்கு ரூ. 450.
120 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனை, சுற்றிலும் மரங்கள், பூக்கள் நிறைந்த தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, ஆகாயத்தை எட்டும் கோபுரங்கள் என அற்புதமான கலைநயத்துடன் 430 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் திருமணத்துக்கும் இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படுகிறது. அரண்மனைக்கு உள்ளே இருக்கும் மன்றத்தில் அல்லது அரண்மனையின் வெளியிலிருக்கும் தோட்டத்தில் திருமணங்கள் நடக்கின்றன.