சிறிய மாற்றமும் புத்துணர்வு தரும்
நாம் கட்டும் வீடு எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும் என்று தான் எப்போதும் ஆசைப்படுகிறோம். அதற்காக நம்மால் முடிந்த அளவு பிரயத்தனப்படுகிறோம். வீடு என்று ஒரே சொல்லில் முடித்துக்கொண்டாலும் அதன் பின்னணியில் பல வேலைகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒழுங்காக முடித்தால்தான் ஒரு வீடு அழகு பெறும். வீட்டின் கட்டுமானப் பணிகளில் அநேகமாக இறுதிப் பணி பெயிண்டிங் மட்டுமே. பெயிண்டிங் வேலைக்கு முன்னர் சுவர்களுக்கு வண்ணமடிப்பது பற்றி யோசிப்போம்.
என்ன விதமான நிறமடித்தால் பார்க்க நன்றாக இருக்கும், எந்த நிறம் அறைக்கு எடுப்பாக இருக்கும் என ஒவ்வொன்றாக யோசித்து, வீட்டு உறுப்பினர்கள், கட்டுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம். இது தான் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். ஆனால், இந்தப் புதிய தலைமுறையினர் தங்கள் வீடுகளில் மரபுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நவீனத்துக்கும் கொடுத்துவருகிறார்கள். அப்படி நவீனத்தை நாடுவாருக்கு நல்வரவு சொல்பவை சுவர்ப் படங்கள்.
பொதுவாக சுவர்ப் படங்கள் வணிக கட்டிடத்துக்கு மட்டுமே உகந்தவை என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் இப்போது இந்த எண்ணம் பலரிடம் மாறத் தொடங்கியுள்ளது. ஆசை ஆசையாகக் கட்டும் வீட்டுக்கும் இத்தகைய சுவர்ப் படங்களை மாட்டிப் பார்க்கப் பலர் விரும்புகிறார்கள். ஒரே மாதிரி எல்லா வீடுகளிலும் வண்ணமடித்து அழகுபடுத்தும்போது, நீங்கள் மாத்திரம் இத்தகைய சுவர்ப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒட்டினீர்கள் என்றால் உங்கள் வீடு தனித்துவமாகத் தெரியும். உங்கள் நண்பர்களால் எளிதில் அடையாளம் காட்டப்பட்ட இந்தச் சுவர்ப் படங்கள் உதவும். பார்ப்பதற்கும் அழகாகவும் இருக்கும். விதவிதமான சுவர்ப் படங்கள் சந்தையில் கிடைக்கின்றன. நீங்கள் இயற்கைப் பிரியரா, அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட சுவர்ப் படங்களை அறையில் ஒட்டிக்கொள்ளலாம்.
நீங்கள் கடவுள் பக்தி மிக்கவரா அப்படியென்றால் விதவிதமான கடவுளர்களை உங்கள் அறைகளில் சுவர்ப் படங்களாகக் குடியமர்த்தலாம். மனம் அமைதி தேடி அலையும் போது, தியானம் செய்ய நீங்கள் எங்கேயும் செல்ல வேண்டிய தேவை இருக்காது. அந்தப் படங்களை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் மனம் பஞ்சுபோல் மென்மையாகிவிடும். அதெல்லாம் இல்லை நாங்கள் மிகவும் நவீனமானவர்கள் என்கிறீர்களா? அப்படியென்றால் சந்தையில் கிடைக்கும் அதி நவீன சுவர்ப்படங்களை நீங்கள் ஒட்டிக்கொள்ளலாம்.
இப்படிச் சுவர்ப் படங்களை ஒட்டும்போது, வீட்டில் இருந்த உணர்வே எழாது. எங்கோ விடுமுறையைக் கழிக்க ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருப்பது போன்ற உணர்வைத் தரும். உங்கள் வீட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறைகளுக்கு மட்டும் இப்படி சுவர்ப் படங்களை ஒட்டிக்கொள்ளலாம். அதாவது, பூஜையறை, வாசிப்பறை, வரவேற்பறை. படுக்கையறை என எந்த அறைக்கு எந்த வகையான சுவப்படம் பொருந்துமோ அந்த சுவர்ப் படத்தை ஒட்டி அழகுபடுத்தலாம்.
வெறுமனே வண்ணமடித்த சுவரைவிட இத்தகைய சுவர்ப் படங்களைப் பார்ப்பது மனதுக்குப் புத்துணர்வு தருவதாகவும் இருக்கும். எப்படியும் நீங்கள் வண்ணமடிக்க ஒரு தொகையை ஒதுக்குவீர்கள் அல்லவா? அதே தொகைக்குள் சுவர்ப் படங்களை ஒட்டும் வேலையை முடித்துக்கொண்டீர்கள் செலவு பற்றிய கவலையை விட்டுவிடலாம். இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ஒரே மாதிரியாக வீடு இருக்க வேண்டும். வீடுகளுக்குள் சிறு சிறு மாற்றங்களையும் கொண்டுவரும்போது நமது வாழ்வின் சின்னச் சின்ன மாற்றங்கள் வருமே?