சிறிய வீட்டைப் பயன்படுத்துவது எப்படி?
சிறிய அளவு பரப்பளவு கொண்ட வீடுகளில் ஒவ்வோர் அடியும் அவசிய மானது. அந்த இடத்தில் எதற்காவது பயன்படுத்தலாம்; புகைப்படங்கள் மாட்டி அழகுபடுத்தலாம். ஆனால் நாம் பெரும்பாலும் வீட்டின் மூலைகளை வேண்டாத பொருள்களைப் போட்டுவைப்பதற்கும் குப்பையைக் கூட்டிவைப்பதற்கும்தான் பயன்படுத்துகிறோம். மூலைகளை எந்த மாதிரியான பயன்பாட்டுக்கெல்லாம் பயன்படுத்தலாம்? கணினி மேஜையை வீட்டின் மூலையில் வைக்கலாம். அதே சமயத்தில் இந்தக் கணினி மேஜையை வேறு இடத்தில் வைக்கும்போது அது வீட்டின் பெரும் பகுதி இடத்தை எடுத்துவிடும். இப்படி மூலையில் அமைக்கும்போது இடம் நமக்கு மிச்சப்படும்.
மூலை ஊஞ்சல்
மூலைகளில் ஒருவர் ஆடத் தகுந்த வகையிலான ஊஞ்சல்களை அமைக்கலாம். இது கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பதற்கு உதவும். வீட்டுக்கும் அழகைச் சேர்க்கும்.
மூலை அலமாரி
மூலைகளில் அலமாரிகள் அமைக்கலாம். இதற்கெனப் பிரத்யேகமான அலமாரிகள் கிடைக்கின்றன. இந்த மாதிரி அலமாரிகள் பயன்பாட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல் வீட்டை அழகுபடுத்தவும் செய்யும். இந்த வகை அலமாரிகளில் புத்தகங்கள், பரிசுப் பொருள்கள், விருதுக் கோப்பைகள் ஆகியவற்றை வைக்கலாம். இவை வீட்டின் வரவேற்பறைக்கு ஏற்றவை.
மூலை நாற்காலி
வீட்டின் மூலைகளைப் பயன்படுத்தும் விதத்தில் இப்போது மூலை சோபா பயன்பாட்டுக்கு வந்தது. அதேபோன்ற மூலை நாற்காலி இது. இதனால் இடம் மிச்சப்படுவது மட்டுமல்லாமல் பயன்பாட்டுக்கும் உதவும்.
மூலை கணினி மேஜை
மூலைகளில் கணினி மேஜை அமைப்பது இப்போது அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது. இதனால் இடம் மிச்சப்படுவது மட்டுமல்லாமல் சுதந்திரமாக தங்கள் அலுவல் பணிகளைப் பார்க்க ஏற்ற மனநிலையை அளிக்கும்.
மூலை மேஜை
ஐரோப்பியப் பண்பாட்டில் மூலைகளை வெறுமனே விட்டுவைக்கும் பழக்கம் முன்பு இல்லை. அதில் ஏதாவது மேஜை ஒன்றை வைத்து அதன் மேல் பூச்செடி வைக்கும் வழக்கம் உண்டு. அதனால் வீட்டின் அழகு கூடும். பூச்செடிகளுக்குப் பதிலாகத் தொலைபேசியும் வைக்கலாம்.