சிறுமி ஆருஷி கொலை வழக்கு: பெற்றோர் விடுதலை
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டு ஆருஷி என்ற சிறுமியை கொலை செய்த வழக்கில், ஆருஷின் பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நொய்டாவில், ஆருஷி தல்வார் என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டின் வேலைக்காரர் ஹேமராஜ் (45) ஆகிய இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், அவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கருதி, ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் இருவரும் அவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த சிபிஐ விசாரணையில், இந்தக் கொலையை பெற்றோர்தான் திட்டமிட்டு செய்ததாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் 2013 ஆம் ஆண்டு அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், ஆருஷியின் பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.